தினமலர் 09.02.2010
ரூ.31 கோடியில் 71 புதிய சாலைகள் : செம்மொழி மாநாடுக்கு மாநகராட்சி திட்டம்
கோவை : “”உலகத்தமிழ் செம்மொழி மாநாடு முன்னிட்டு, கோவை நகரில் 71 பகுதிகளில் 31 கோடி ரூபாயில் புதிய சாலைகள் அமைக்கப்படும்,” என, மேயர் வெங்கடாசலம் தெரிவித்தார்.
அவர் நேற்று அளித்த பேட்டி: கோவையில் உலகத்தமிழ் செம்மொழி மாநாடு ஜூன் மாதம் நடக்கிறது. இதில் பங்கேற்க, நாடு முழுவதும் பல மாநிலங்களில் இருந்தும், வெளி நாடுகளிலிருந்தும் ஏராளமான தமிழ் அறிஞர்கள், பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். மாநாட்டின் போது கோவை வந்து செல்வோர் வசதிக்காக, சாலைகள் செப்பனிடப்படுகின்றன. சில இடங்களில் புதிய சாலைகள் அமைக்கும் திட்டம் உள்ளது. நகரில் 71 பகுதிகளிலுள்ள சாலைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன; தரமான புதிய சாலைகள் அமைக்கப்படும்.மேலும், லட்சுமி மில்ஸ் சந்திப்பு, விமான நிலைய சந்திப்பு உள்ளிட்ட 32 இடங்களிலுள்ள முக்கிய சாலை சந்திப்புகளில் உயர் கோபுர மின் விளக்குகள் அமைக்கப்படும். உள்ளூர் திட்டக்குழுமத்தால் ஒதுக்கீடு செய்யப்பட்ட 6.5 லட்சம் ரூபாயில் ஆவராம்பாளையம் சின்னசாமிநாயுடு ரோட்டிலிருந்து நவஇந்தியா பகுதி வரையும், மசக்காளிபாளையத்திலிருந்து ரங்கவிலாஸ் மில் வரையும் திட்டச்சாலை அமைக்கப்படுகிறது. மேலும், 16 வது வார்டுக்கு உட்பட்ட பீளமேடு, திருமகள் நகரில் ஒரு ஏக்கரில் 33.5 லட்சம் ரூபாயில் உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டு பூங்கா, வரும் 14 ம் தேதி திறக்கப்படுகிறது; இதில், அமைச்சர் பழனிசாமி பங்கேற்கிறார்.
உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டுக்கு வரும் மக்களின் வசதிக்காக நடமாடும் கழிப்பறைகள் ஏற்படுத்தப்படும். இதற்காக, 3.46 கோடி ரூபாயில் 50 நடமாடும் கழிப்பறை வாகனங்கள் வாங்கப்படும். மாநாட்டுக்கு பின் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு மாற்றப்படும். இந்த கழிப்பறைகளை பயன்படுத்த கட்டணம் கிடையாது. மாநகராட்சி எல்லைக்குட்பட்ட முக்கிய பகுதிகளில், மாநகராட்சி மற்றும் உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டு முத்திரை ஆகிய இரண்டையும் ஒட்டி விளம்பரப்படுத்தும் பணி விரைவில் துவங்கும்.இவ்வாறு, மேயர் வெங்கடாசலம் தெரிவித்தார். பேட்டியின் போது, துணைமேயர் கார்த்திக் உடனிருந்தார