தினமலர் 21.07.2010
கடலில் இருந்து குடிநீர் சென்னையில் 31ம் தேதி துவக்கம்
பொன்னேரி : கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை வரும் 31ம் தேதி முதல்வர் கருணாநிதி திறந்து வைக்க உள்ளார். அதற்கான ஏற்பாடுகளை நேற்று துணை முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார்.சென்னை அடுத்த மீஞ்சூர் அருகேயுள்ள காட்டுப்பள்ளி கிராமத்தில் கடந்த 2007 ஆம் ஆண்டு சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் வடிகால் வாரியமும், ஐ.வி.ஆர்.சி.எல்., என்ற இந்திய நிறுவனமும், பேபசா என்ற ஸ்பெயின் நாட்டு நிறுவனமும் இணைந்து கடல் நீரை குடிநீராக மாற்றும் திட்டத்தில் ஈடுபட்டன.
துணை முதல்வர் ஸ்டாலினால் அடிக்கல் நாட்டப்பட்டு இத்திட்டப் பணிகள் நடந்து வந்தன. இதற்காக 600 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதன் கட்டுமான பணிகள் துரிதமாக நடைபெற்று வந்தன. துணை முதல்வர் அடிக்கடி நேரில் சென்று பார்வையிட்டு பணிகளை துரிதப்படுத்தி வந்தார்.மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வந்த திட்டப்பணிகள் தற்போது முடிவடைந்துள்ளன. இதன் மூலம் தினமும் 10 கோடி லிட்டர் கடல்நீர் குடிநீராக மாற்றப்பட்டு, சென்னை குடிநீர் வடிகால் வாரியத்தால் சென்னை மக்களுக்கு வழங்கப்படவுள்ளது.இத்திட்டத்தை முதல்வர் கருணாநிதி வரும் 31ம்தேதி துவக்கி வைக்கிறார். துவக்க விழா ஏற்பாடுகள் குறித்தும், கடல்நீரை குடிநீராக்கும் திட்டப்பணிகள் குறித்தும், நேற்று காலை 9 மணிக்கு துணை முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டார்.திட்டப்பணிகளை பார்வையிட்டு செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்வர் “கடல் நீரை குடிநீராக மாற்றும் திட்டப்பணிகள் முடிவடைந்துள்ளன. வரும் 31ம்தேதி தமிழக முதல்வரால் துவக்கப்படவுள்ளது.இதன் மூலம் சென்னை பெருநகர மக்களின் குடிநீர் தேவை முழு அளவில் பூர்த்தியடையும்‘ என்றார்.கடல்நீரை குடிநீராக மாற்றும் திட்டப்பணிகளை பார்வையிட்டு, அங்கிருந்து 18,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் செயற்கை துறைமுகம், ராணுவ தளம் மற்றும் கப்பல் கட்டும் தளம் ஆகிய பணிகளையும் அவர் பார்வையிட்டார்.அவருடன் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டி.பி. ராஜேஷ், மாவட்ட போலீஸ் எஸ்.பி., வனிதா, பொன்னேரி டி.எஸ்.பி., ரங்கராஜன் மற்றும் வடிகால் வாரிய தலைமை பொறியாளர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.