தினமணி 31.08.2010
ரூ3.16 கோடி கோருகிறது அறந்தாங்கி நகராட்சிஅறந்தாங்கி, அக். 30: அறந்தாங்கி நகரில் பழுதடைந்துள்ள சாலைகளைப் புதுப்பிக்க சிறப்புச் சாலைகள் திட்டத்தின் கீழ் |ரூ 3.16 கோடி வழங்கக் கோரி அறந்தாங்கி நகர்மன்றம் திங்கள்கிழமை தீர்மானம் நிறைவேற்றியது. அறந்தாங்கி நகர்மன்றத்தின் அவசரக் கூட்டம் நகர்மன்றத் தலைவர் பழ. மாரியப்பன் தலைமையில் நடைபெற்றது.
ஆணையர் பா. அசோக்குமார், பொறியாளர் தங்கபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில்,நகராட்சி நிர்வாக இயக்குநரகம் கேட்டுள்ளபடி, இயற்கை இடர்பாடுகள் மற்றும் குடிநீர்த் திட்டங்களினால் பழுதடைந்துள்ள சாலைகளில் முன்னுரிமை அடிப்படையில் 27 வட்டங்களிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட 25 கி.மீ. நீள சாலைகளைப் புதுப்பிக்க ரூ| 3.16 கோடி திட்ட மதிப்பீட்டிற்கு ஒதுக்கீடு செய்து நகர்மன்றம் தீர்மானம் நிறைவேற்றியது.
முன்னதாக தீர்மானம்பற்றி பேசிய உறுப்பினர்கள் லெ. முரளிதரன், கோ. இளங்கோ, மு.வீ. பார்த்திபன், வி.ஆர்.எஸ். சுப்பிரமணியன் உள்ளிட்ட உறுப்பினர்கள் தங்கள் வட்டங்களில் சாலைப் பணிகளை முடிவு செய்தபோது, தங்களுக்கு தகவல் தெரிவிக்கவில்லை என்று புகார் தெரிவித்தனர்.
இதுபற்றி நகர்மன்றத் தலைவர் பழ. மாரியப்பன் கூறுகையில், “”மன்றத்தின் அனுமதிக் கடிதம் கொடுக்க வேண்டிய கால அவகாசம் குறைவாக இருந்த காரணத்தாலேயே தகவல் தெரிவிக்க முடியவில்லை என்றும் திட்டத்தில் வேறு சாலைகளை மாற்றி சேர்த்துக்கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.