தினமலர் 05.02.2010
சுகாதார பணிகள் தனியாரிடம் : ஆண்டு தோறும் ரூ.31.8 லட்சம் மிச்சம்
மேட்டுப்பாளையம் நகராட்சியின் 11 வார்டுகளில் குப்பை அள்ளி, சுகாதாரத்தை மேம்படுத்தும் பணி தனியாரிடம் விடப்பட்டுள்ளது. இதன் மூலமாக, நகராட்சி நிர்வாகத்துக்கு ஆண்டுக்கு 31.8 லட்சம் ரூபாய் மிச்சமாகிறது.மேட்டுப்பாளையம் நகராட்சியிலுள்ள 33 வார்டுகளில் சுகாதார பணிகளை மேற்கொள்ள 210 துப்புரவு பணியாளர்கள் தேவை; ஆனால், 162 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். பணியாளர் பற்றாக்குறையால் பல வார்டுகளிலும் குப்பை அகற்றப்படாமல் மலைபோல் குவிந்துள்ளது.
இதை சுத்தம் செய்ய அவ்வப்போது ஒட்டுமொத்த பணியாளர்களையும் திரட்டி, “மாஸ் கிளீனிங்‘ முறையில் குப்பை அள்ளப்படுகிறது. இப்பணி நடக்கும் போது, பிற வார்டுகளில் குப்பை தேங்கி, மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்படுகிறது. இப்பிரச்னைக்கு தீர்வு காண முதற்கட்டமாக, 3, 5, 8, 10, 11, 12 ,25, 27, 30, 31, 32 ஆகிய 11 வார்டுகளில் குப்பை அகற்றி, சுகாதாரத்தை மேம்படுத்தும் பணி தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம் மாதம் 4.97 லட்சம் ரூபாய்க்கு புள்ளி குறித்து டெண்டர் எடுத்துள்ளது; இத்தொகை நகராட்சி சார்பில் தனியார் நிறுவனத்துக்கு வழங்கப்படும். இதற்கான ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இத்திட்ட துவக்கவிழா, மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்டில் நடந்தது. நகராட்சித் தலைவர் சத்தியவதி தலைமை வகித்து, சுகாதார பணியாளர் சீருடைகள் மற்றும் சாதனங்களை வழங்கினார். நகராட்சி துணைத்தலைவர் ஆறுமுகம், நகர்நல அலுவலர் பிரதீப், கவுன்சிலர்கள் உமா, வெள்ளிங்கிரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். சுகாதார பணியை கான்ட்ராக்ட் எடுத்துள்ள தனியார் நிறுவனத்தின் ஊழியர்கள் கூறுகையில், “நகராட்சியின் 11 வார்டுகளில் குப்பை அள்ள டெண்டர் எடுத்துள்ளோம். இந்த வார்டுகளில் குப்பை அள்ளுவது, கொசு மருந்து தெளிப்பது, சாக்கடை சுத்தம் செய்வது உள்பட துப்புரவு பணிகளும் மேற்கொள் ளப்படும். நகராட்சி பணியாளர்களின்றி நாங்கள் மட்டுமே இதற் கான பணியில் ஈடுபடுவோம்‘ என்றனர்.
தனியார் மய திட்டம் குறித்து, மேட்டுப்பாளையம் நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
தனியார் திட்டம் துவங்கியுள்ள 11 வார்டுகளில், இதற்கு முன் சுகாதாரப் பணிகளை மேற்கொள்ள மாதம் தோறும் 7.62 லட்சம் ரூபாயை நகராட்சி செலவிட்டு வந்தது. இதில், வாகன பராமரிப்பு, டீசல் செலவு, பணியாளர் சம்பளம் உள்ளிட்ட அனைத்தும் அடக்கம். ஆனால், சுகாதார பணியை மேற் கண்ட 11 வார்டுகளில் மேற்கொள்ள, ஆரணியைச் சேர்ந்த தனியார் நிறுவனம் மாதம் தோறும் 4.97 லட்சம் ரூபாயில் மேற் கொள்ள டெண்டர் எடுத்துள்ளது. இதன் மூலமாக நகராட்சிக்கு ஆண்டு தோறும் இந்த 11 வார்டுகளில் மட்டும் 31.8 லட்சம் ரூபாய் மிச்சம் ஆகிறது. மேலும், கண்காணிப்பு, வாகன பராமரிப்பு உள்ளிட்ட பிரச்னைகள் முற்றிலும் தவிர்க்கப்படுகிறது. பணியாளர் பற்றாக்குறை தவிர்க்கவே தனியார் திட்டத்தை துவக்கியுள்ளோம். பணியில் இருக்கும் ஆட்களை குறைக்கும் திட்டம் எதுவுமில்லை. இவ்வாறு, அதிகாரிகள் தெரிவித்தனர்