பம்மல் நகராட்சியில் 32 கல் குவாரிகளுக்கு பூட்டு
பல்லாவரம்:பம்மல் நகராட்சிக்கு உட்பட்ட, சங்கர் நகர், காமராஜபுரம் பகுதிகளில் இயங்கி வரும், 32 கல் குவாரிகளை மூட, தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது.பல்லாவரம் அடுத்து, பம்மல் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், ஏராளமான கல்குவாரிகள் இயங்கி வருகின்றன. இந்த குவாரிகள், குடியிருப்பு பகுதியில் இருந்து, 500 மீ., தூரத்தில் தான் இயங்க வேண்டும்.ஆனால், குறிப்பிட்ட தூரத்திற்கு உள்ளேயே இவை இயங்கி வருவதால், பகுதிவாசிகள், பல்வேறு இன்னல்களை சந்திக்க வேண்டிய நிலை உருவானது.இதை தொடர்ந்து, இந்த கல் குவாரிகளை மூட வலியுறுத்தி, கடந்தாண்டு ஜூலையில், பம்மல்ஸ்ரீசங்கரா நகர் நல்வாழ்வு சங்கம் சார்பில், ஆயிரம் பேர் கையெழுத்திட்ட மனு, முதல்வரின் தனிப் பிரிவில் அளிக்கப்பட்டது.அதன் எதிரொலியாக, மாசு கட்டுப்பாட்டு வாரியம், தற்போது, 32 கல் குவாரிகளை மூடுவதற்கும், அவற்றின் மின் இணைப்பை துண்டிக்கவும் உத்தரவிட்டுள்ளது.அந்த பகுதியில் இயங்கும், 49 கல் குவாரிகளில், 13 குவாரிகள், மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி பெற்று இயங்கி வருகின்றன. அவை, மாசு கட்டுப்பாட்டு வாரிய நிபந்தனைகளை, முறையாக கடைப்பிடிக்க வேண்டும் எனவும், வாரியம், அறிவுறுத்தி உள்ளது.