தினமலர் 17.06.2010
குறுக்குதுறை தலைமை நீரேற்று நிலையத்தில் ரூ.3.25 கோடியில் “சான்ட் பில்டர் யூனிட்ஸ்‘
திருநெல்வேலி : குறுக்குதுறை தலைமை நீரேற்று நிலையத்தில் 3.25 கோடியில் “ரேபிட் சான்ட் பில்டர் யூனிட்ஸ்‘ வசதி விரைவில் செய்யப்பட உள்ளது.
நெல்லை மாநகராட்சி பகுதிகளுக்கு குடிநீர் சப்ளை செய்யும் குறுக்குதுறை தலைமை நீரேற்று நிலையத்தில் நல்ல குடிநீருக்கான சுத்திகரிப்பு வடிகட்டி அமைப்பான் (ரேபிட் சான்ட் பில்டர் யூனிட்ஸ்) 3.25 கோடி மதிப்பீட்டில் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக நெல்லை அரசு இன்ஜினியரிங் கல்லூரி நிர்வாகத்தை கலந்தாலோசகராக நியமனம் செய்து மாநகராட்சியில் அனுமதி வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து உட்கட்டமைப்பு பற்றாக்குறையை ஈடுசெய்வதற்கான பங்களிப்பு நிதியின் கீழ் 3.25 கோடி மதிப்பில் செயல்படுத்த முதற்கட்டமாக 2.50 கோடி மானிய தொகையை நகராட்சி நிர்வாக இயக்குனர் ஒதுக்கீடு செய்துளார்.
இக்குடிநீர் பணியை நிறைவேற்றும் வகையில் மீதமுள்ள 75 லட்சம் தொகையை பங்களிப்பு நிதியின் கீழ் 2010-11ம் ஆண்டில் பெறப்படும் மானியத்தில் பணியை மேற்கொள்ளவும், அவ்வாறு மானியம் பெறப்படாத பட்சத்தில் மாநகராட்சி வருவாய் நிதியில் இருந்த செலவினம் மேற்கொள்ளவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வரும் 21ம் தேதி நடக்கும் மாநகராட்சி கூட்டத்தில் விவாதித்து தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.