ரூ. 3.29 கோடியில் வளர்ச்சிப் பணிகள்
திண்டிவனத்தில் வளர்ச்சிப் பணிகளுக்காக சுமார் ரூ.3.29 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய நகர்மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
திண்டிவனம் நகர்மன்ற சாதாரணக் கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்திற்கு நகர்மன்றத் தலைவர் கே.வி.என்.வெங்கடேசன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் ஏ.வி.முகமதுஹரிப் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.
தீர்மானங்கள்:
சலவாதி சாலையில் உள்ள நவீன மயானத்தில் அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ள ரூ.32.70 லட்சம் ஒதுக்க வேண்டும்.
கிடங்கல் பகுதியில் உள்ள நவீன இறைச்சிக் கூடத்தின் மேம்பாட்டுப் பணிகளுக்காக ரூ.15 லட்சம் ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
குஷால்சந்த் பூங்கா அருகே அங்கன்வாடி கட்டடம் கட்டும் பணிக்காக ரூ.45 லட்சம் ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
மாரிசெட்டிக்குளம் பகுதியில் சிமென்ட் சாலை அமைக்க ரூ.36 லட்சம் ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
மொத்தம் 18 வார்டுகளில் பிற்படுத்தப்பட்ட மண்டலங்களுக்கான மானிய நிதித் திட்டத்தின் கீழ் குடிசைப்பகுதிகளின் வளர்ச்சிப் பணிகளுக்காக ரூ.1.44 கோடி ஒதுக்க வேண்டும் ஆகிய தீர்மானங்கல் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
மேலும் பொது வளர்ச்சிப் பணிகளுக்கான ரூ.57.88 லட்சம் ஒதுக்கியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக திண்டிவனம் நகராட்சியில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க ரூ.55.43 கோடி ஒதுக்கியுள்ள தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.