தினமலர் 22.07.2010
ரூ.33.42 லட்சம் மதிப்பில் திரு.வி.க., பாலம் சீரமைப்பு
அடையாறு : அடையாறு திரு.வி.க., மேம்பாலம் 33.42 லட்சம் ரூபாய் செலவில் பக்கவாட்டு சுவர் எழுப்பி சீரமைக்கும் பணி துவங்கியது.அடையாறு திரு.வி.க., மேம்பாலம் 35 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்தது. இதன் வழியாக நாள் ஒன்றுக்கு பல்லாயிரக்கணக்கான இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் சென்று வருகின்றன. இப்பாலம் முறையாக பராமரிக்காமல் விட்டதால், பக்கவாட்டிலுள்ள தடுப்பு சுவர்கள் பழுதடைந்து காணப்பட்டன.விபத்துக்கள் ஏற்படும் வாய்ப்புள்ளதால் அவற்றை சீரமைக்க வேண்டுமென “தினமலர்‘ நாளிதழ் படத்துடன் செய்தி வெளியிட்டு வந்தது. இதன், நடவடிக்கையாக தற்போது 33.42 லட்சம் ரூபாய் செலவில் சீரமைக்கும் பணி துவங்கியுள்ளது.இது குறித்து மாநகராட்சியின் பாலங்கள் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “அடையாறு திரு.வி.க., மேம்பாலத்தை மாநகராட்சியின் 10வது மண்டலம் சார்பில் சீரமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி திட்ட மதிப்பீடு தயாரித்து 33.42 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. கடந்த 10ம் தேதி டெண்டர் விடப்பட்டு தற்போது, ஆரம்பக் கட்ட பணிகள் துவக்கப்பட்டுள்ளன. மேம்பாலத்திலுள்ள பக்கவாட்டு சுவர்கள் அகற்றப்பட்டு தடுப்பு சுவர்கள் அமைக்கப்படவுள்ளன. அதில், அழகான ஓவியங்களும் வரைப்படவுள்ளது‘ என்றார்.