தினமலர் 27.07.2012
நீர்வழி தடங்களை சுத்திகரிக்க நிதி ஒதுக்கீடு : சென்னை நகரில் 337 இடங்கள் தேர்வு
சென்னை : சென்னையின் பிரதான நீர்வழி தடங்களான அடையாறு, கூவம் பக்கிங்ஹாம் கால்வாய் ஆகியவற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க, 300 கோடி ரூபாய் செலவில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை அமைக்க முதல்வர் உத்தரவிட்டு உள்ளார்.
சென்னை நகரின் பொருளாதார மற்றும் மக்கள் தொகை வளர்ச்சிக்கு ஏற்ப, கட்டமைப்பு வளராததால், இயற்கை ஆதாரங்களில் கழிவுநீர் மற்றும் குப்பை கொட்டுவது அதிகரித்து வருகிறது. இதனால், கூவம், அடையாறு மற்றும் பக்கிங்ஹாம் கால்வாய் “செத்து’விட்டதாக அண்ணா பல்கலை, கடந்த வாரம், அரசிடம் அறிக்கை கொடுத்தது.அதன்படி, இந்த நீர்வழிகளில், கலக்கும் தொழிற்சாலை மற்றும் குடியிருப்பு பகுதிகழிவுநீரால், ஆக்சிஜன் அளவு மிகவும் குறைந்து, எந்த வகை உயிரினமும் வாழ முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.
கடந்த ஏழு ஆண்டுகளாக இந்த ஆய்வு நடந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும், இந்த நீர்வழிகளின் நிலை குறித்து அரசுக்கு அறிக்கை அளிக்கப் படுகிறது.
துவங்கவில்லை முந்தைய தி.மு.க., ஆட்சியின் போது, அடையாறு, கூவம் ஆறுகள் சுத்தப் படுத்தப் படும் என்று, அறிவிக்கப் பட்டது. ஆனால், அதற்கான முதல்கட்ட பணிகள் கூட துவக்கப் படவில்லை. ஆய்வின் பேரில், முன்னாள் துணை முதல்வர் ஸ்டாலின் தலைமையில், சில “மாஜி’க்கள் சிங்கப்பூர் பயணம் மட்டும் மேற்கொண்டனர்.இந்த நிலையில், சென்னையின் பிரதான நீர்வழி தடங்களில் கழிவுநீர் கலப்பதை தடுக்க, 337 இடங்களில் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்வதற்கான ஏற்பாடுகளை செய்ய, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டு உள்ளார்.
அரசு உத்தரவுஇது குறித்து,நேற்று, அரசு வெளியிட்ட அறிக்கை விவரம்:
சென்னை நகர நீர்வழி பாதைகளில் கழிவுநீர் கலக்க கூடிய, கூவம் ஆற்றில், 105 இடங்கள்; பக்கிங்ஹாம் கால்வாயில், 183 இடங்கள், அடையாறில், 49 இடங்கள் என, 337 இடங்களில் கழிவுநீரை சுத்திகரிக்க 300 கோடி ரூபாய் ஒதுக்கப் பட்டு உள்ளது.இந்த பணிகளை மேற்கொள்ள முதல்கட்டமாக, 150 கோடி ரூபாயை தவணை முறையில் சென்னை பெருநகர் குடிநீர் வாரியத்திற்கு விடுவிக்கவும் உத்தரவிடப் பட்டு உள்ளது.
இதன் படி, பிரதான கழிவுநீர் குழாய்கள் அமைத்தல், சிறிய அளவிலான குழாய்களை அகற்றி, அதிக லிட்டர் கொள்ளளவு கொண்ட கழிவுநீர் உந்து குழாய்கள் அமைத்தல், சாலையோரம் சிறிய கழிவுநீரேற்றும் நிலையங்கள் அமைத்தல், ஏற்கனவே உள்ள கழிவுநீரேற்றும் நிலையங்களில் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளுதல் மற்றம் ஏற்கனவே உள்ள சிறிய அளவிலான கழிவுநீர் குழாய்களை பெரிய குழாய்கள் கொண்டு மாற்றி அமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப் படும்.இதன் மூலம், சென்னையில் சுத்திகரிக்கப் படாத கழிவுநீர் ஆறுகளுடன் கலப்பது தடுத்து நிறுத்தப்படும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப் பட்டு உள்ளது.