கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சியில் ரூ.3.39 கோடியில் அடிப்படை வசதிகள்
பெருந்துறை அருகே கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சியில் ரூ.3.39 கோடியில் அடிப்படை வசதி செய்வதற்கான பூமிபூஜை ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது.
இவற்றை, வருவாய்த் துறை அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாசலம் தொடங்கிவைத்தார். அவர் பேசுகையில், கடந்த பட்ஜெட்டில் பெருந்துறை பேரூராட்சிக்கு ரூ.52 கோடியை பாதாளச் சாக்கடை திட்டத்துக்காக முதல்வர் ஒதுக்கினார். இத் திட்டம் கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சிக்கும் விரைவில் விரிவுபடுத்தப்படும். பெருந்துறை பேரூராட்சிக்கு புதிய அலுவலகம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
பெருந்துறை மற்றும் கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சிகளில் காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டம் மூலமாக அனைத்து விரிவாக்கப்பட்ட பகுதிகளுக்கும் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன என்றார்.
மாவட்ட ஆட்சியர் வே.க.சண்முகம், மாவட்ட வருவாய் அலுவலர் சு.கணேஷ், தொகுதி செயலர் திங்களூர் எஸ்.கந்தசாமி, பெருந்துறை ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் எஸ்.பெரியசாமி, துணைத் தலைவர் விஜயன் (எ) ராமசாமி, கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சித் தலைவர் ஜானகி குப்புசாமி, துணைத் தலைவர் கே.பி.எஸ்.மோகன்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.