தினமணி 16.11.2009
குமரி மாவட்டத்தில் பிற மாநில குழந்தைகள் 343 பேருக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து
நாகர்கோவில், நவ. 15: கன்னியாகுமரி மாவட்டத்தில் பிற மாநிலங்களில் இருந்கு வசிக்கும் குடும்பங்களைச் சேர்ந்த 343 குழந்தைகளுக்கு ஞாயிற்றுக்கிழமை போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் வசிக்கும் இக் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்க சுகாதாரத் துறை உத்தரவிட்டது. இதையடுத்து, இரு கட்டமாக நவம்பர் 15, டிசம்பர் 13 இரு தேதிகளில் சொட்டுமருந்து கொடுப்பது என முடிவு செய்யப்பட்டது.
மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் ஆய்வு செய்யப்பட்டதில் 724 குடும்பங்களைச் சேர்ந்த 343 குழந்தைகள் 5 வயதிற்கு உட்பட்டவர்கள் என தெரிய வந்தது. இதையடுத்து, அவர்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.
நாகர்கோவில் நகராட்சி சுகாதார அலுவலர் போஸ்கோ ராஜா வடசேரி பகுதியிலும், மாவட்ட சுகாதாரப் பணிகள் உதவி இயக்குநர் சுந்தரவல்லி, மாவட்ட தாய்சேய் நல அலுவலர் சுப்புலட்சுமி செண்பகராமன்புதூர், ஆரல்வாய்மொழி பகுதியிலும் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கினர். டிசம்பர் 13-ம் தேதி இரண்டாம் கட்டமாக வழங்கப்படுகிறது.