தினகரன் 11.01.2010
3.45 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டத்தில் 3.45 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் நேற்று நடந்தது. மாவட்டம் முழுவதும் 1,576 முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன. ரயில், பஸ் நிலையம் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகாம்கள் நடந்தன.
பொது மக்கள் நீண்ட வரிசையில் நின்று குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போட்டுச் சென்றனர். மாவட்டத்தில் 3 லட்சத்து 45 ஆயிரம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டது.
இந்த பணியில், 776 சுகாதார துறையினரும், 3,014 சமூக நலத்துறையினரும், தொண்டு நிறுவனங்கள், மாணவ, மாணவிகள், வருவாய் துறையினர் உட்பட மொத்தம் 6,212 பேர் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் நகராட்சி அலுவலகம் மற்றும் மாவட்ட தலைமை மருத்துவமனையில் முகாம்கள் அமைக்கப்பட்டன. சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் சம்பத் தலைமை வகித்தார். நகராட்சி தலைவர் பொன்.பாண்டியன், ஆணையர் முத்துராமேஸ்வரன் முன்னிலை வகித்தனர்.
முகாமை, இ.ஏ.பி.சிவாஜி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். திமுகவினர் பரசுராமன், ரவி, நந்தகுமார், கவுன்சிலர்கள் ராஜ்குமார், மகேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
திருவள்ளூர் சத்தியமூர்த்தி தெரு நகராட்சி நடுநிலைப் பள்ளியில், நகராட்சி முன்னாள் தலைவர் தி.ராசகுமார், கொப்பூரில் மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் விஜயகுமார் ஆகியோர் முகாமை தொடங்கி வைத்தனர்.
ஆவடி: ஆவடி நகராட்சி சார்பில், 75 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடந்தது. நகராட்சியில் 31,344 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டது.
விழிஞ்சியம்பாக்கம் சுகாதார மையத்தில் முகாமை, நகராட்சி தலைவர் விக்டரி மோகன் தொடங்கி வைத்தார். துணைத்தலைவர் அப்துல் ரகீம், ஆணையாளர் ராமமூர்த்தி, பொறியாளர் குருசாமி, சுகாதார அதிகாரி சின்னப்பன், ஆய்வாளர்கள் மோகன், பாஸ்கர், சுருளி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
* அம்பத்தூர் நகராட்சியில் 72 மையங்களில் சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடந்தது. 44,211 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டது.
அம்பத்தூர் பஸ் நிலையத்தில் நடந்த முகாமை, நகராட்சி ஆணையாளர் ஆசிஷ்குமார் தொடங்கி வைத்தார். சுகாதார அதிகாரி மணிமாறன், கவுன்சிலர் மூர்த்தி, சுகாதார ஆய்வாளர் வெங்கடேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பள்ளிப்பட்டு: பொதட்டூர்பேட்டையில் போலியோ சொட்டு மருந்து முகாமை, இ.எஸ்.எஸ்.ராமன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். திருத்தணி முருகன் கோயில் அறங்காவலர் ஏ.வி.சக்கரப்பன், மாநில கைத்தறி வளர்ச்சிக்கழக இயக்குனர் மூர்த்தி, சுகாதார ஆய்வாளர்கள் அண்ணாமலை, தேசப்பன், செவிலியர் புஷ்பா, முன்னாள் கவுன்சிலர் சுப்பிரமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சொரக்காய்பேட்டை ஆரம்ப சுகாதாரம் நிலையம் சார்பில், 27 மையங்களில் 5,011 குழந்தைகளுக்கும், அத்திமாஞ்சேரிபேட்டை ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், 36 மையங்களில் 4,747 குழந்தைகளுக்கும், ஆர்.கே.பேட்டை ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், 24 மையங்களில் 3,205 குழந்தைகளுக்கும், அம்மையார்குப்பம் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், 23 மையங்களில் 3,171 குழந்தைகளுக்கும், வங்கனூர் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் 20 மையங்களில் 2,949 குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.