346 குடிசைவாசிகளுக்கு ஜூன் இறுதிக்குள் வீடுகள்
சென்னை ராஜா அண்ணாமலை மன்றம் அருகே குடிசைகளில் வசிக்கும் 346 குடும்பத்தினருக்கு வரும் ஜூன் இறுதிக்குள் வீடுகள் வழங்கப்படும் என்று குடிசை மாற்று வாரியம் உறுதியளித்துள்ளது.
இது தொடர்பாக சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி பொது நல மனு தாக்கல் செய்திருந்தார். ராஜா அண்ணாமலை மன்றம் பகுதியில் ஏராளமானோர் சாலைகளின் அருகே ஆக்கிரமிப்பு செய்து குடிசைகளில் வசிக்கின்றனர். அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி, பாதுகாப்பான இடத்தில் குடியமர்த்தி அவர்களுக்கு மறுவாழ்வு அளித்திட வேண்டும் என்று கோரி 25.9.2012 அன்று அரசுக்கு கோரிக்கை மனு அனுப்பினேன். எனினும் வாக்கு வங்கி அரசியலுக்காக அந்த மக்களுக்கு மறுவாழ்வு மறுக்கப்படுகிறது என்று அந்த மனுவில் ராமசாமி கூறியிருந்தார்.
இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, சென்னை மாநகராட்சி நிர்வாகம் குடிசைகள் குறித்து கணக்கெடுத்து எங்களிடம் விவரங்களை அளித்தால் அந்த மக்களுக்கு மாற்று குடியிருப்பு வசதிகளை செய்து தருவோம் என்று குடிசை மாற்று வாரியம் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி ஆர்.கே. அகர்வால், நீதிபதி என். பால் வசந்தகுமார் ஆகியோரைக் கொண்ட முதன்மை அமர்வில் புதன்கிழமை (பிப்ரவரி 20) விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னை மாநகராட்சி சார்பில் ஆஜரான வழக்குரைஞர் வி.சி. செல்வசேகரன், சென்னை ராஜா அண்ணாமலை மன்றம் அருகேயுள்ள முத்துசாமி சாலையில் 259 குடும்பங்களும், தங்கை முருகப்பா தெருவில் 87 குடும்பங்களும் சாலைகளை ஆக்கிரமித்து குடிசைகளை அமைத்திருப்பதாகவும், இந்தப் பட்டியல் குடிசை மாற்று வாரியத்திடம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அப்போது குடிசை மாற்று வாரியம் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் எஸ்.பி. பிரபாகரன், வரும் ஜூன் இறுதிக்குள் இந்த 346 குடும்பங்களுக்கும் குடியிருப்புக்கான மாற்று வசதிகளை வாரியம் செய்து கொடுக்கும் என்று உறுதியளித்தார்.
இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கினை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.