35% குறைந்தது சென்னை ஏரிகளின் நீர் இருப்பு: குடிநீர் தட்டுப்பாட்டை தவிர்க்க நடவடிக்கை
தினமணி 04.04.2013
35% குறைந்தது சென்னை ஏரிகளின் நீர் இருப்பு: குடிநீர் தட்டுப்பாட்டை தவிர்க்க நடவடிக்கை

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு குடிநீர்
வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களான பூண்டி, செம்பரம்பாக்கம், சோழவரம்
ஏரிகளின் நீர் இருப்பு 35 சதவீதமாகக் குறைந்துள்ளது.
இதன் காரணமாக கோடை காலத்தில் மக்களுக்குத் தேவையான அளவு குடிநீர்
விநியோகம் செய்வதில் சிக்கல் எழுந்துள்ளதுள்ளது. இருப்பினும் கோடை கால
குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க லாரி மூலம் குடிநீர் விநியோகம்,
பிளாஸ்டிக் டேங்குகள் அமைத்தல் உள்பட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக
குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் விரிவாக்கப்பட்ட பகுதிகளில் நாளொன்றுக்கு 83 கோடி
லிட்டர் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருவதாகத் தகவல்கள்
தெரிவிக்கின்றன. இந்த நிலையில் பூண்டி, செம்பரம்பாக்கம், சோழவரம், புழல்
ஏரிகளின் நீர் இருப்பு 3 ஆயிரத்து 944 மில்லியன் கன அடியாக குறைந்துள்ளது.
கடந்த ஒரு மாதத்துக்குள் பூண்டி ஏரியின் நீர்மட்டம் 4 அடியும், புழல்
ஏரியின் நீர்மட்டம் 3 அடியும் குறைந்துள்ளது.
இது குறித்து நீர்வளத் துறை அதிகாரிகள் கூறியது:
பருவமழை குறைவு: வடகிழக்கு பருவமழை பொய்த்துப் போனதன் விளைவாக
மாநிலத்தின் முக்கிய நீர் ஆதாரங்களில் நீரின் அளவு இந்த ஆண்டு உயரவில்லை.
அக்டோபரில் இருந்து டிசம்பர் மாதம் வரை சராசரியாக 44 செ.மீ மழை பதிவாக
வேண்டும். ஆனால் கடந்த வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் தமிழகத்தில் 37
செ.மீ மழையே பதிவானது.
மேலும் கிருஷ்ணா நதிநீர்ப் பங்கீட்டுத் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 12
டி.எம்.சி தண்ணீரை ஆந்திர அரசு தமிழகத்துக்கு வழங்க வேண்டும். ஆனால் கடந்த
ஆண்டில் நதிநீர்ப் பங்கீட்டுத் திட்டத்தின் அடிப்படையில் முழுமையான அளவு
தண்ணீர் வழங்கப்படவில்லை.
குடிநீர் தட்டுப்பாடு இல்லை: ஏரிகளில் நீர் இருப்பு குறைந்த போதிலும்
அடுத்த சில மாதங்களுக்கு விநியோகம் செய்யும் அளவுக்கு நீர் உள்ளது. எனவே
இந்த கோடையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை என்றனர்.
இந்த ஆண்டு கோடையை சமாளிக்க மேற்கொள்ளப்படும் சிறப்பு ஏற்பாடுகள்
குறித்து குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியது: குடிநீர் வாரியம் சார்பில்
நாளொன்றுக்கு 83 கோடி லிட்டர் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இதைத் தவிர நெம்மேலியில் தொடங்கப்பட்டுள்ள கடல் நீரைக் குடிநீராக்கும்
நிலையத்திலிருந்து தினமும் 10 கோடி லிட்டர் குடிநீர் பெறப்படுகிறது.
இந்த கடல் குடிநீர் திருவான்மியூர், வேளச்சேரி, பள்ளிப்பட்டு மற்றும்
தகவல் தொழில்நுட்ப பூங்கா, கேளம்பாக்கம், இந்திராநகர் பகுதிகளில்
விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதைத் தவிர நாளொன்றுக்கு 9 கோடி லிட்டர்
வீராணம் குடிநீர் சென்னைக்கு வருகிறது. மேலும் 2.4 கோடி லிட்டர் நிலத்தடி
நீர் வீராணம் வழித்தடங்களிலிருந்து கிடைக்கிறது என்றனர்.
கைப் பம்புகள் பராமரிப்பு
மக்களுக்கு போதுமான அளவு
குடிநீர் வழங்கும் வகையில் வீடுகளில் உள்ள கைப்பம்புகளை பராமரிக்க
நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. செயல்படாமல் உள்ள கைப்பம்புகளை
சரிசெய்து குடிநீர் விநியோகம் சீராக கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
லாரிகள் மூலம் விநியோகம்
சென்னை மாநகராட்சியில்
புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில் பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டிகள்
அமைக்கப்பட்டு வருகின்றன. இதைத் தவிர லாரிகள் மூலம் அப்பகுதிகளில் குடிநீர்
விநியோகிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மழை நீர் சேகரிப்பு அவசியம்
குடிநீர் வாரியம்
சார்பில் கோடையைச் சமாளிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இருப்பினும் குடிநீர் ஏரிகளின் நீர் இருப்பை கொண்டு இன்னும் 3
மாதங்களுக்கு மட்டுமே சமாளிக்க முடியும். தண்ணீர் சிக்கனம் மற்றும் மழை
நீர் சேகரிப்பு தொட்டி அமைத்தால் மட்டுமே ஜூன் மாதத்துக்கு பிறகு
குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படாமல் தடுக்க முடியும் என்று குடிநீர் வாரிய
அதிகாரிகள் தெரிவித்தனர்.