தினமலர் 22.08.2013
மாநகராட்சி மின் பராமரிப்பு பணிகள்…தனியார் மயம்! 35% செலவை குறைக்க நடவடிக்கை
ஈரோடு: கோவை, மதுரையை தொடர்ந்து, ஈரோடு மாநகராட்சியில் மின்சாரத்தை சிக்கனப்படுத்தும் நடவடிக்கையாக, தெரு விளக்குகள் பராமரிப்பு பணியை, கோவையை சேர்ந்த தனியார் நிறுவனத்திடம் நேற்று ஒப்படைத்தனர்.
ஈரோடு மாநகராட்சி, நான்கு மண்டலங்கள், 60 வார்டுகள், 109.52 சதுர கி.மீ., பரப்பளவில், ஐந்து லட்சம் மக்கள் வசிக்கின்றனர். மாநகராட்சியாக தரம் உயர்த்தும், புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகள் உள்ளிட்ட ஒட்டுமொத்த பகுதியில், 18,439 தெரு விளக்குகள், மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளன.
ஹைமாஸ் கோபுரங்கள், சோடியம் விளக்குகள், டியூப் லைட்டுகள், சி.எஃப்.எல்., பல்புகள் கொண்ட விளக்குகள் பயன்பாட்டில் உள்ளன.
மாநகராட்சியில் ஆண்டுதோறும் தெரு விளக்குள் பராமரிப்பு பணிக்கு, 18.89 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
புறநகர் பகுதியிலும், மாநகராட்சியுடன் இணைந்த பகுதிகளிலும், ஆறு மாதம் முதல், ஓராண்டுகள் தெருவிளக்குள் இன்றி, வெறும் கம்பங்களும், பழுதடைந்த மின் விளக்குள் பராமரிப்பு இன்றி உள்ளது.
பொதுமக்கள், கவுன்சிலர்கள் மூலம் தெரிவிக்கும் புகார்கள், “செவிடன் காதில் ஊதிய சங்காகவே’ இதுநாள் வரையிலும் இருந்து வருகிறது.
மண்டலங்கள் தோறும், மூன்று பேர் கொண்ட குழு, நாளொன்றுக்கு, 130 முதல், 200 ரூபாய் தினக்கூலி அடிப்படையில் ஆமை வேகத்தில் பணிகளை செய்து வந்தனர்.
தெரு விளக்கு பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண, தனியாரிடம் விட முடிவு செய்தனர். கோவையை சேர்ந்த சல்சர் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திடம் தற்போது ஒப்படைத்துள்ளனர்.
நேற்று காலை, பிரப் ரோடு, நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தின் முன், ஒப்படைப்பு விழா, மாநகராட்சி கமிஷனர் விஜயலட்சுமி தலைமையில் நடந்தது. துணை மேயர் பழனிச்சாமி, மண்டலத்தலைவர்கள் மனோகரன், கேசவமூர்த்தி, பொறியாளர் ஆறுமுகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சல்சர் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் பொறியாளர் திருமலைசாமி கூறியதாவது:
சென்னை, கோவை, மதுரையை தொடர்ந்து, ஈரோட்டில் கால்பதித்துள்ளோம்.
மாநகராட்சியில் 35 சதவீதம் மின்சாரம், செலவீனத்தை சிக்கனப்படுத்தும் வழிமுறைகளை கையாள உள்ளோம்.
முதற்கட்டமாக மாநகராட்சியில் தெரு விளக்குகள் எண்ணிக்கை, கம்பங்களிடையே உள்ள தூரத்தை கணக்கிட்டு, பயன்பாட்டில் உள்ள, 12,000 டியூப் லைட்டுகளை, எல்.இ.டி., விளக்குகளாக மாற்றப்படும்.
ஒரு முறை பொருத்தினால், 15 ஆண்டுகள், 50,000 மணி நேரம் எரியக்கூடியதாகும். இதனால், 32 சதவீத மின்சாரத்தை சேமிக்க முடியும்.
நகரில் பயன்பாட்டில் உள்ள சோடியம் விளக்குகளை தானியங்கி கருவி பொருத்தி, இரவு, 11 மணி முதல் காலை, 6 மணி வரையில், 30 சதவீதம் டிம் சப்ளை கொடுக்கப்படும்.
புறநகர பகுதியில், 2,000 புதிய தெரு விளக்குகள் பொருத்தப்படும். ஒட்டுமொத்த தெரு விளக்குகளை ஒரே குடையின் கீழ் கொண்டு வந்து, கண்ட்ரோல் அமைத்து, கணினி மயமாக்கப்படும்.
ஊழியர்களுக்கு சி.யு.ஜி., மொபைல்ஃபோன்கள் வழங்கி, புகார்கள் உடனுக்குடன் நிவர்த்தி செய்யப்படும். 21ம் தேதி முதல், மூன்று மாத பரிசோதனை முடிவுக்கு பின், எல்.இ.டி., மின் விளக்கு பொருத்தும் பணி துவங்கும், என்றார்.