தினமலர் 26.12.2009
ரூ.35 லட்சம் செலவில் தரமான சாலைகள் அமைக்க மாநகராட்சி திட்டம்
திருச்சி: திருச்சி மாநகரில் தரமான ரோடுகளை உருவாக்கும் வகையில் புதிய நவீன தொழில்நுட்பத்தில் தென்னூர் உழவர் சந்தையில் பரீட்சார்த்த முறையில் புதிய சாலை போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. சென்னைக்கு அடுத்தபடியாக பெரிய நகரமாக திருச்சி மாறி வருகிறது. ஆகையால் மாநகரில் உள்ள சாலைகள் அனைத்தையும் தரமானதாக மாற்ற மாநகராட்சி தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. மாநகரின் பல இடங்களில் மாநகராட்சி ஒப்பந்தக்காரர்கள் மூலம் போடப்படும் புதிய சாலைகள் சில காலத்திலேயே மீண்டும் ரிப்பேர் செய்யும் அளவுக்கு தரமற்றதாக இருக்கிறது.
இதுகுறித்து ஒப்பந்தக்காரர்களிடம் மாநகராட்சி சார்பில் விளக்கம் கேட்டால் பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது. இதனால் மாநகரின் பல இடங்களில் தரமான சாலைகள் அமைப்பது பெரும் பிரச்னையாக இருந்து வருகிறது.
இந்நிலையில் மாநகரில் தரமான, நீடித்த உழைக்கும் சாலைகளை அமைக்க அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்த மாநகராட்சி முடிவு செய்துள்ளது. புதிய தொழில்நுட்பத்தின் படி தார்ச்சாலைகள் அமைக்கும் இடத்தை மூன்றடி பள்ளம் தோண்டி, அதில் மணல், ண்ணாம்பு, மணல் என்ற வரிசைப்படி பள்ளம் நிரப்பப்படுகிறது. அதன்பின் வெட்மிக்ஸ் (ஜல்லி, டஸ்ட், சிமெண்ட் கலவை) போட்டு பேவர் எந்திரம் மூலம் தார்ச்சாலை அமைப்படும். இவ்வாறு அமைக்கப்படும் தார்ச்சாலைகள் மழை, வெயில் என்று எல்லாவிதமான கால சூழ்நிலைகளையும் தாங்கும் திறன் கொண்டது. ஆகையால், அப்படிப்பட்ட சாலைகளை மாநகர் முழுவதும் போட மாநகராட்சி அதிகாரிகளால் திட்டமிடப்பட்டு வருகிறது. அதேசமயம், புதிய தொழில்நுட்பத்தில் அமைக்கப்படும் சாலைகள் தரமானதாக இருக்கிறதா? என்பதை பரிசோதிக்க முதல்கட்டமாக தென்னூர் உழவர் சந்தை சாலையில் 300 மீட்டர் மட்டும் புதிய தொழில்நுட்பத்டைத பயன்படுத்த முடிவு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
உழவர் சந்தை ரோட்டில் அடிக்கடி பழுதடையும் 300 மீட்டர் தூரம் மட்டும் புதிய தொழில்நுட்பத்தில் ரோடு அமைக்கும் பணி 35 லட்சம் ரூபாய் செலவில் நடந்து வருகிறது. இதுகுறித்து மாநகராட்சியின் இளநிலை பொறியாளர் ஜெகஜீவன்ராம் கூறியதாவது: புதிய தொழில்நுட்ப முறையில் மாநகரில் தரமான சாலைகள் அமைக்கும் வகையில், அந்த தொழில்நுட்பத்தை பரிசோதிக்கும் வகையில் உழவர் சந்தை ரோட்டில் 300 மீட்டர் மட்டும் ரோடு அமைக்கும் பணி நடந்து வருகிறது. ரோட்டின் அருகில் உய்யகொண்டான் ஆற்றின் கரை வருவதால், அதற்கு ஏற்றாற்போல் திட்டமிடப்பட்டு ரோடு போடும் பணி நடந்து வருகிறது. புதிய தொழில் நுட்பத்தில் அமைக்கப்படும் சாலை திருப்தி அளிக்கும் பட்சத்தில் மாநகர் முழுவதும் இதுபோன்ற சாலைகள் அமைக்கப்படும் என்று தெரிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.