மாலை மலர் 18.08.2009
காவிரி ஆற்றில் இருந்து வீராணம் ஏரிக்கு மீண்டும் தண்ணீர்: வினாடிக்கு 350 கன அடி வருகிறது
சென்னை, ஆக. 18-
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒன்றான, வீராணம் ஏரி சமீபத்தில் வறண்டு காணப்பட்டது. மேட்டூர் அணை திறக்கப்பட்ட பிறகு வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு காவிரி தண்ணீர் விடப்பட்டது. ஆனால் சில தினங்களுக்கு முன்பு தண்ணீர் வரத்து நின்று விட்டது.
இதனால், விவசாயிகள் மிகவும் கவலை அடைந்தனர். இந்த நிலையில் வீராணம் ஏரி நீர் பிடிப்பு பகுதிகளில் 2 நாட்களாக நல்ல மழை பெய்து இருக்கிறது. இதனால் கீழ் அணை மற்றும் வாய்க்கால் மூலம் வீராணம் ஏரிக்கு 1500 கன அடி வீதம் தண்ணீர் வந்தது.
இதற்கிடையே, மீண்டும் வீராணம் ஏரிக்கு காவிரி தண்ணீர் திறந்து விடப்பட்டது. நேற்று இரவு இந்த தண்ணீர் வீராணம் ஏரியை சென்றடைந்தது. இதனால் வீராணம் ஏரிக்கு நீர்வரத்து அதிகமாகியது.
தற்போது வீராணம் ஏரிக்கு வினாடிக்கு 350 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. கீழ் அணை மற்றும் கால்வாய் தண்ணீரும் வருகிறது. இதனால் ஏரியின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி நீர் மட்டம் 40 அடியாக உள்ளது. தண்ணீர் இருப்பு 120 மில்லியன் கன அடியாக அதிகரித்திருக்கிறது.
2 நாட்கள் பெய்த மழை காரணமாக புழல், சோழவரம் ஏரிகளுக்கு தண்ணீர் வருகிறது. புழல் ஏரிக்கு இன்று காலை வினாடிக்கு 118 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இங்கு நீர் இருப்பு 1948 மில்லியன் கன அடியாக உள்ளது. சோழவரம் ஏரிக்கு இன்று 35 கனஅடி தண்ணீர் வருகிறது. நீர் இருப்பு 158 மில்லியன் கன அடி.
நேற்று புழல் ஏரி பகுதியில் 19 மில்லி மீட்டரும், சோழவரத்தில் 20 மில்லி மீட்டரும் மழை பெய்துள்ளது. பூண்டியில் 11 மி.மீ., செம் பரம்பாக்கத்தில் 15 மி.மீ. மழை பெய்திருக்கிறது. இன்றைய நிலவரப்படி பூண்டியில் 325 மில்லியன் கன அடியும், செம்பரம்பாக்கத்தில் 806 மில்லியன் கன அடியும் தண்ணீர் இருக்கிறது.
நேற்று சென்னை மீனம்பாக்கத்தில் 19.8 மி.மீ மழையும், நுங்கம்பாக்கத்தில் 17.5 மி.மீ மழையும் பெய்து இருக்கிறது. இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென் கிழக்கு வங்க கடலில் ஏற்பட்டுள்ள வெப்ப சலன சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் மழை பெய்து வருகிறது. மேலும் 2 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வட தமிழ்நாட்டில் பலத்த மழை பெய்யலாம். சென்னையில் மாலை அல்லது இரவில் மழை பெய்யக்கூடும் என்று வானிலை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.