திருவொற்றியூர் மண்டலத்தில் ரூ.3.50 கோடிக்கு வளர்ச்சிப் பணிகள்
தினமணி 12.07.2013
திருவொற்றியூர் மண்டலத்தில் ரூ.3.50 கோடிக்கு வளர்ச்சிப் பணிகள்
சென்னை மாநகராட்சி சார்பில் திருவொற்றியூர்
மண்டலத்தில் ரூ.3.5 கோடிக்கு வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள வார்டு குழு
கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டல மாதாந்திர வார்டு குழு கூட்டம்
மண்டலக் குழுத் தலைவர் தன.ரமேஷ் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. உதவி
ஆணையர் கென்னடி, செயற்பொறியாளர் காளிமுத்து முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள் பேசியது:
செல்வம் (வார்டு 2): குடிசைகள் நிரம்பிய கத்திவாக்கத்தில் குடிநீர்
தட்டுப்பாடு நிலவுகிறது. குடிநீர் வாரியம் இதில் சிறப்பு கவனம் செலுத்த
வேண்டும். பாதாளச் சாக்கடை தூர்வாரும்போது கழிவுகள் சாலையிலேயே
கொட்டப்படுவதால் துர்நாற்றம் வீசுகிறது.
பி.தமிழரசன் (வார்டு 3): அன்னை சிவகாமி நகரில் நிதி ஒதுக்கீடே செய்யாமல்
பாதாளச் சாக்கடைத் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. ஏற்கெனவே
தெருவிளக்கு அமைக்கும் பணி இரண்டு மாதத்துக்கு முன்பே தொடங்கிவிட்டது.
ஆனால் புதிதாக பூஜை போடுவது விநோதமாக உள்ளது. வார்டில் ஓர் இடத்தில்கூட
குடிநீர் வாரியம் மூலம் குடிநீர் வழங்கப்படவில்லை.
சரவணன் (வார்டு 4): புதிய தெருவிளக்குகள் அமைக்கப்பட்டதில் 30 சதவீத
விளக்குகள் எரிவதில்லை. போதுமான துப்புரவுத் தொழிலாளர்கள் இல்லை.
கத்திவாக்கம் நெடுஞ்சாலையை நவீன முறையில் சீரமைத்து பொலிவூட்ட வேண்டும்.
இறப்புச் சான்றிதழ் வழங்குவதில் லஞ்சம் பெறப்படுவதை தடுக்க வேண்டும்.
கே.பி.சங்கர் (வார்டு 5): சக்திபுரம் பகுதியில் சாலைகள் மோசமான நிலையில்
உள்ளன. எம்.ஆர்.எப். சாலையில் மழைநீர் வடிகால் அமைக்காமல் சாலை
போடுகின்றனர். எரிவாயு தகன மேடை இயங்கவில்லை. இதனால் மயானத்தில்தான்
பிணங்கள் எரிக்கப்படுகின்றன. ஒரு சடலத்தை எரிக்க ரூ.5 ஆயிரம் செலவிட
வேண்டியுள்ளது. அங்குள்ள ஆம்புலன்ஸ் பழுதடைந்துள்ளது. பாரத் நகர், விம்கோ
நகர் பகுதியில் உயர் கோபுர மின்விளக்குகள் அமைக்க வேண்டும்.
வின்சென்ட் அமுல்ராஜ் (வார்டு எண் 6): எர்ணாவூர்-மணலி சாலையில் சாலை
அகலப்படுத்தும் பணிக்காக குடிநீர் குழாய்களை மாற்றியமைக்க வேண்டும். சாலை
வசதி, குடிநீர் வசதி வேண்டும்.
கலையரசன் (வார்டு எண் 7): திருவொற்றியூர் மேற்குப் பகுதியை இணைக்கும்
கிளாஸ் பேக்டரி சாலை முழுவதும் சேறும், சகதியுமாக உள்ளது. இச்சாலை குறித்த
நீதிமன்ற வழக்கை விரைவில் முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு உறுப்பினர்கள் பேசினர்.
உறுப்பினர்களின் புகார்களுக்கு மண்டலக் குழுத் தலைவர் தன.ரமேஷ் விளக்கம்
அளித்தார். கூட்டத்தில் ரூ.3.50 கோடி மதிப்பீட்டிலான 53 பணிகளுக்கு வார்டு
கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டன. உறுப்பினர்களின் எதிர்ப்பால் ஐந்து
பணிகள் தள்ளிவைக்கப்பட்டன.