ரூ.352 கோடி குடிநீர், கழிவுநீர் வரி வசூல்
சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் கடந்த நிதியாண்டில் (2012-13) ரூ.352.74 கோடி குடிநீர் மற்றும் கழிவுநீர் வரி வசூலிக்கப்பட்டுள்ளதாக குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.
கடந்த உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பு வரை 155 வார்டுகளை உள்ளடக்கிய சென்னை மாநகராட்சி, அதன் பிறகு 200 வார்டுகளாக விரிவாக்கம் செய்யப்பட்டது. இதையடுத்து சென்னை பெருநகர குடிநீர் வாரியத்துடன் விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகள் இணைக்கப்பட்டன.
புதிதாக இணைக்கப்பட்டுள்ள பகுதிகளிலிருந்து கடந்த நிதியாண்டில் ரூ.9.5 கோடி குடிநீர் வரி வசூல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து குடிநீர் வாரிய உயர் அதிகாரிகள் கூறியது:
குடிநீர் மற்றும் கழிவுநீர் வரி செலுத்துவதன் அவசியம் குறித்து பொதுமக்களிடையே சிறப்பு விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டன. இதன் மூலம் 2012-13 நிதியாண்டில் 87 சதவீதம் வரி வசூலிக்கப்பட்டுள்ளது. இது 2011-12 நிதியாண்டைவிட ரூ.20.13 கோடி கூடுதலாகும். நடப்பு நிதியாண்டில் 100 சதவீதம் வரி வசூலிக்க பல்வேறு நடவடிக்கைகளை குடிநீர் வாரியம் மேற்கொண்டு வருகிறது என்றனர்.