தினமணி 08.02.2010
3.61 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து
வேலூர்,பிப்.7: வேலூர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து முகாம்களில் 5 வயதுக்குட்பட்ட 3,61,532 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டது.
இவ்வாண்டுக்கான 2}ம் தவணை போலியோ சொட்டு மருந்து முகாம்கள், வேலூர் மாவட்டத்தில் 2,248 மையங்களில் நடைபெற்றன.
வேலூர் அருகேயுள்ள தொரப்பாடி பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து முகாமை ஆட்சியர் செ.ராஜேந்திரன் தொடங்கி வைத்தார்.
சுகாதாரம், கல்வி, சமூக நலம், வருவாய்த்துறை, தொண்டு நிறுவனம் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 8,854 பேர் சொட்டு மருந்து வழங்கும் பணியில் ஈடுபட்டனர். மேற்பார்வை பணியில் 402 பேர் ஈடுபடுத்தப்பட்டனர்.
மொத்தம் 3,61,418 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.
விடுபட்ட குழந்தைகளுக்கு திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை போலியோ சொட்டு மருந்து வழங்கப்படவுள்ளது.
குடியாத்தம்
குடியாத்தம் நகரில் ஞாயிற்றுக்கிழமை போலியோ சொட்டு மருந்து முகாம் 31 மையங்களில் நடைபெற்றன. மேல்ஆலத்தூர் சாலையில் அமைக்கப்பட்டிந்த முகாமில் நகர்மன்றத் தலைவர் எம். பாஸ்கர், ஒரு குழந்தைக்கு சொட்டு மருந்து வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
நகராட்சி ஆணையர் ஆர். சுப்பிரமணியன், சுகாதார அலுவலர் சி. ஆறுமுகம், சுகாதார ஆய்வாளர் பிரணாகரன், இன்னர்வீல் சங்கச் செயலர் பிரியா குப்புசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஆம்பூர்
ஆம்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடந்த போலியோ சொட்டு மருந்து முகாமில் 13,821 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆம்பூர் பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த மையத்தில் நகரமன்றத் தலைவர் வாவூர் நஜீர் அஹமத், குழந்தைக்கு சொட்டு மருந்து வழங்கி முகாமை தொடங்கி வைத்தார்.
நகராட்சி ஆணையர் தா. உதயராணி, துப்புரவு அலுவலர் (பொறுப்பு) நாராயணமூர்த்தி, துப்புரவு ஆய்வர் பாலசந்தர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.