கோடை குடிநீர்த் தேவைக்காக ரூ. 37 கோடியில் 4,000 பணிகள்
திருச்சி மாவட்டத்தில் கோடையை சமாளிக்கும் வகையில், அனைத்து ஊராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியங்களில் வழக்கமான பணிகளை நிறுத்தி, குடிநீர்த் தேவைகளுக்கு முன்னுரிமை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக ஆட்சியர் ஜெயஸ்ரீ முரளிதரன் தெரிவித்தார்.
அத்துடன், ரூ. 37 கோடியில் 4000 குடிநீர்த் திட்டப் பணிகள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
திருச்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைகேட்பு நாள் கூட்டத்துக்கு தலைமை வகித்து அவர் பேசியது:
திருச்சி மாவட்டத்தில் சம்பா மற்றும் தாளடி 44,686 ஹெக்டேரில் சாகுபடி முடிந்து, 24,818 ஹெக்டேரில் அறுவடை முடிந்துள்ளது. நடப்பு பருவத்துக்கு தேவையான அளவு உரங்கள் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கி மற்றும் தனியார் உரக் கடைகளிலும் இருப்பு உள்ளது.வறட்சியை சமாளிக்க கடந்த ஆண்டு மாவட்டத்திலுள்ள அனைத்து ஊராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியங்களில் மற்ற அனைத்துப் பணிகளையும் நிறுத்திவிட்டு குடிநீர்ப் பணிகளை மட்டும் கவனித்தோம். அதேபோல, இந்த ஆண்டும் குடிநீர்ப் பணிகளை மட்டும் தீவிரமாக கவனிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், ரூ. 37 கோடியில் ஏறத்தாழ 4,000 பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. விவசாயிகள் தங்கள் பகுதியின் தேவை குறித்து எழுதிக் கொடுத்தால், அவற்றையும் இதில் இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், சுவை குறைந்த நிலத்தடி நீர் உள்ள பகுதிகளில் “ஆர்ஓ’ முறைப்படி தண்ணீர் சுத்திகரிப்பு செய்து பொதுமக்களுக்கு விநியோகிக்கவும் அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது’ என்றார் ஜெயஸ்ரீ.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் த. தியாகராஜன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) பாண்டியராஜன், வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் ச. தியாகராஜன், நபார்டு வங்கியின் உதவிப் பொதுமேலாளர் எஸ். சுரேஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.