ஜயங்கொண்டம் நகராட்சியில் ரூ.38 லட்சத்தில் வளர்ச்சிப் பணிகள்
அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் நகராட்சியில் ரூ. 38 லட்சம் மதிப்பில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது.
அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் நகர்மன்றக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைவர் மீனாள் சந்திரசேகர் தலைமை வகித்தார். துணைத் தலைவர் பி.ஆர். செல்வராஜ், ஆணையர் நவேந்திரன் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் உறுப்பினர்களின் விவாதம்:
வெ.கொ. கருணாநிதி: நகர்மன்றக் கூட்டத்தில் தீர்மானங்கள் மட்டுமே வாசிக்கப்படுகிறது.
நகராட்சியின் வரவு-செலவு கணக்குகளை ஒவ்வொரு கூட்டத்திலும் வாசிக்க வேண்டும் என கூறியிருந்தோம். அடுத்து வரும் நகர்மன்றக் கூட்டங்களில் வரவு-செலவு கணக்குகளை வாசிக்க வேண்டும்.
துரை: நகராட்சியில் துப்புரவு பணியாளர்கள் குறைவாகவே உள்ளனர். எனவே புதிதாக துப்புரவு பணியாளர்கள் நியமனம் செய்ய வேண்டும்.
எஸ். மூர்த்தி: 6 மாதங்களுக்கு ஒரு முறையே நகர்மன்றக் கூட்டம் நடத்தப்படுகிறது.
ஒவ்வொரு மாதமும் 10-ஆம் தேதிக்குள் கூட்டம் நடத்தப்பட வேண்டும்.
கணேஷ்குமார்: அண்ணாசிலை அருகே உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை மது அருந்தவும், சிலர் குளிக்கும் இடமாகவும் பயன்படுத்தி வருகிறார்கள் இதை தடுக்க வேண்டும்.
ஆணையர் நவேந்திரன் உறுப்பினர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக கூறினார்.
கூட்டத்தில் ரூ. 27 லட்சம் மதிப்பில் சாலைப்பணிகள், ரூ. 7 லட்சம் மதிப்பில் குடிநீர் பராமரிப்பு பணிகள், ரூ. 4 லட்சம் மதிப்பில் ஜெனரேட்டர் வாங்குவது உள்ளிட்டத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.