வேலூர் அம்மா உணவகங்களில் ஒரே நாளில் ரூ.38 ஆயிரம் வசூல்
வேலூர் மாநகராட்சியில் அமைக்கப்பட்டுள்ள 10 அம்மா உணவகங்களில் விற்பனை மூலம் ஒரே நாளில் ரூ.38 ஆயிரம் வசூல் ஆனது.
அம்மா உணவகம்
வேலூர் மாநகராட்சி பகுதியில் 10 இடங்களில் அம்மா உணவகம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு இட்லி ரூ.1–க்கும், சாம்பார் சாதம் ரூ.5–க்கும், தயிர் சாதம் ரூ.3–க்கும் விற்பனை செய்யப்படுகிறது.ஒரு உணவகத்துக்கு இட்லிக்கு தலா 30 கிலோ அரிசியும், சாம்பார் சாதத்துக்கு 25 கிலோ அரிசியும், தயிர் சாதத்துக்கு 25 கிலோ அரிசியும் கற்பகம் கூட்டுறவு கடைகளில் பெறப்படுகிறது. தயிர் தலா 12½ லிட்டரும் வாங்கப்படுகிறது. மேலும் தேவையான மளிகை பொருட்கள், காய்கறிகள் வெளியில் வாங்கப்படுகின்றன.மகளிர் சுயஉதவி குழுவினர் மூலம் இங்கு உணவுகள் தயாரித்து விற்பனை செய்யப்படுகிறது.
ரூ.38 ஆயிரம் வசூல்
வேலூர் மாநகராட்சி பகுதியில் உள்ள 10 அம்மா உணவகங்களில் நேற்று அனைத்து உணவுகளும் ஒரு மணி நேரத்தில் விற்று தீர்ந்தன.10 உணவகங்களிலும் சேர்த்து நேற்று ஒரே நாளில் 14 ஆயிரத்து 850 இட்லியும், 3 ஆயிரத்து 525 சாம்பார் சாதமும், 2 ஆயிரத்து 7 தயிர் சாதமும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று ஒரே நாளில் இந்த 10 உணவகங்களிலும் விற்பனை மூலம் ரூ.38 ஆயிரத்து 496 வசூல் ஆனது.