ரயில்வே மேம்பாலங்களில் ரூ.38 லட்சத்தில் மின் விளக்குகள்
நாமக்கல் நகராட்சிப் பகுதியிலுள்ள மூன்று ரயில்வே மேம்பாலங்களில் ரூ.38 லட்சத்தில் மின் விளக்குகள் அமைத்திட நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்காக, நாமக்கல் மக்களவைத் தொகுதி மேம்பாட்டு நிதி, மற்றும் தன்னிறைவுத் திட்டத்தின் கீழ் பொதுமக்கள் நிதியையும் பயன்படுத்திக் கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
சேலம் – கரூர் அகல ரயில் பாதைத் திட்டப் பணிகள் நிறைவுபெற்று கடந்த வாரம் முதல் பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் பாதையில் சேலம் – கரூர் இடையே 47 மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. அவற்றில் நாமக்கல் நகராட்சி எல்லைக்குள் மூன்று மேம்பாலங்கள் அமைந்துள்ளன. அனைத்து மேம்பாலங்கள் மீதும் இதுவரை மின் விளக்கு வசதி ஏற்படுத்தப்படவில்லை.
இதனால், இரவு நேரங்களில் மேம்பாலங்கள் மீது பொதுமக்கள் மிகுந்த பீதியுடன்தான் சென்று வந்தனர். இதைத் தவிர்க்க, மேம்பாலங்கள் மீது மின் விளக்கு வசதி ஏற்படுத்திக் கொடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.
இதையடுத்து, நாமக்கல் நகராட்சி தனது எல்லைக்குள் வரும் மூன்று மேம்பாலங்கள் மீது மீது மின் விளக்குகள் அமைக்க திட்டமிட்டுள்ளது.
இதற்கு ரூ.38 லட்சம் செலவு ஆகும் என்று மதிப்பீடப்பட்டுள்ளது. இதில் ஒரு மேம்பாலத்தின் மீது மின் விளக்குள் அமைத்திட நாமக்கல் மக்களவைத் தொகுதி மேம்பாட்டு நிதியை பயன்படுத்திக் கொள்ள திட்டமிடப்பட்டு, அதற்கான கருத்துருக்கள் மக்களவை உறுப்பினர் செ.காந்திசெல்வனுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
மற்ற இரு ரயில்வே மேம்பாலங்கள் மீது தன்னிறைவுத் திட்டத்தின் கீழ் பொதுமக்கள் நிதியுடன், நகராட்சி பொது நிதி மற்றும் அரசு நிதியையும் பயன்படுத்தி மின் விளக்குகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக நகராட்சித் தலைவர் ஆர்.கரிகாலன் தெரிவித்தார்.