தினமலர் 02.03.2010
மேலும் 39 மாநகராட்சி கடைகள் ஏலம் விட ஏற்பாடு
மதுரை : மதுரை மாநகராட்சிக்கு சொந்தமான மேலும் 39 கடைகள், நாளை ஏலம் விடப்படுகின்றன.மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்ட், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் பஸ் ஸ்டாண்ட், மேலவெளி வீதி, மங்கம்மாள் சத்திரம், தமிழ்ச்சங்கம் ரோடு, கான்சா மேட்டு தெரு, ஜான்சிராணி பூங்கா, நன்மை தருவார் கோயில் தெரு, எழுத்தாணிக்காரத் தெரு, மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட் ஆகிய இடங்களில், முன்பு கட்டப்பட்ட 80 மாநகராட்சி கடைகள் உள்ளன.
இவற்றை நடத்தியவர்களில் பலர் எங்கு இருக்கின்றனர் என தெரியவில்லை. பல கடைகளுக்கு பல ஆண்டுகளாக வாடகை வரவில்லை. இக்கடைகளை அருகில் இருந்த மற்ற கடைக்காரர்கள் பயன்படுத்தினர். இக்கடைகளை மீண்டும் ஏலத்திற்கு விட மாநகராட்சி முடிவு செய்தது. ஒவ்வொரு கடைக்கும் அளவைப் பொறுத்து, ஒரு லட்சம் ரூபாய் அல்லது இரண்டு லட்சம் ரூபாய் டெபாசிட் தொகையாக நிர்ணயம் செய்யப்பட்டது. இவற்றில் 70 கடைகளுக்கு பிப்.23 ஏலம் விடப்பட்டது.
ஏலம் விடப்பட்ட கடைகள் மூலம், மாநகராட்சிக்கு 55 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்தது. ஏலம் போகாதவை உள்பட மீதி 39 கடைகளுக்கு நாளை ஏலம் நடக்கிறது. இக்கடைகளுக்கு செலுத்தப்படும் “டெபாசிட்‘ தொகை மூலம், 39 லட்சம் ரூபாயும், வாடகையாக மாதம் 2 லட்சம் ரூபாயும் மாநகராட்சிக்கு வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.