தினமலர் 09.08.2012
உரிமம் பெறாத 39 ஆயிரம் கடைகள் “நோட்டீஸ்’ அனுப்ப மாநகராட்சி முடிவு
சென்னை:வணிக உரிமம் பெறாமல் செயல்பட்டு வரும், 39 ஆயிரம் கடைகளுக்கு “நோட்டீஸ்’ அனுப்ப மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
சென்னை மாநகராட்சி பகுதியில், வணிக வரி செலுத்தும் கடைகள், நிறுவனங்கள் இரண்டு லட்சத்திற்கும் மேல் உள்ளன. இவை மாநகராட்சியிடம் முறையான உரிமம் பெறுவது அவசியம். ஆனால், 29 ஆயிரம் பேர் மட்டுமே வணிக உரிமத்தைப் பெற்றுள்ளனர். இந்நிலையில், இது தொடர்பாக அதிகாரிகள், வணிக உரிமம் பற்றி மண்டல வாரியாக ஆய்வு நடத்தினர். இதில், 39,290 கடைகள் உரிமம் பெறாமல் இயங்குவது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், இந்த கடைகளுக்கு, “நோட்டீஸ்’ அனுப்புவது எனவும், அலட்சியம் காட்டினால் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது எனவும் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். ஓரிரு நாளில், “நோட்டீஸ்’ அனுப்பும் பணி நடக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.