தினமலர் 01.04.2010
ரூ.3.92 லட்சத்தில் வந்தாச்சு உபகரணங்கள் : ஆரணி நகரில் இனி தேங்காது ‘குப்பைகள்‘
ஆரணி : ஆரணி நகராட்சிக்கு மொத்தம் 3 லட்சத்து 92 ஆயிரம் ரூபாய் மதிப்பில் குப்பைக் கூடைகள் மற்றும் தள்ளுவண்டிகள் வழங்கப்பட்டன. ஆரணி நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. இதில் 1 முதல் 11 வரையிலான வார்டுகளின் துப்புரவு பணி, தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. எஞ்சியுள்ள 22 வார்டுகளில் நகராட்சியினரே துப்புரவு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், துப்புரவு பணிகளை மேற்கொள் வதற்கு சரியானபடி உபகரணங்கள் இல்லாததால், நகரின் பல இடங்களில் துப்புரவு பணியில் சுணக்கம் ஏற்பட்டது. இதை கருத்தில்கொண்டு, நகராட்சி பொது நிதியில் இருந்து ஒரு வார்டுக்கு 11 ஆயிரத்து 900 ரூபாய் வீதம் 33 வார்டுகளுக்கு மொத்தம் 3 லட்சத்து 92 ஆயிரத்து 700 ரூபாய் மதிப்பீட்டில் குப்பை சேகரிக்கும் கூடைகள் மற்றும் தள்ளுவண்டிகள் வாங்கப்பட்டன. இவற்றை நகராட்சி வசம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், எம்.எல்.ஏ., சிவானந்தம் கலந்துகொண்டு, வார்டுக்கு ஒரு தள்ளுவண்டி மற்றும் 4 குப்பை கூடைகள் வீதம் நகராட்சி தலைமை துப்புரவு ஆய்வாளர் ராமலிங்கத்திடம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், நகராட்சி கமிஷனர் சசிகலா, நகராட்சி தலைவர் சாந்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.