தினத்தந்தி 24.06.2013
அந்தியூர் பேரூராட்சியில் ரூ.3¼ கோடியில் புதிய குடிநீர்
திட்டப்பணிகள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் தொடங்கி வைத்தார்
நலத்திட்ட உதவிகள்…
அந்தியூர் பேரூராட்சியில் புதிய குடிநீர் திட்ட பணிகள் தொடக்கவிழா, 10
வணிக வளாக கடைகள் திறப்பு விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகியவை
நடைபெற்றது. விழாவுக்கு கலெக்டர் சண்முகம் தலைமை தாங்கினார்.
எஸ்.எஸ்.ரமணீதரன் எம்.எல்.ஏ., அந்தியூர் பேரூராட்சி தலைவர் மீனாட்சி
சுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர்
அப்பாநாயக்கர், துணைத்தலைவர் சன்ரைஸ் சிவக்குமார், பால் உற்பத்தியாளர் சங்க
தலைவர் செல்வராஜ் ஆகியோர் பேசினார்கள்.
தமிழக வருவாய்த்துறை அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாசலம் ரூ.3¼ கோடியில்
புதிய குடிநீர் திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், புதிய வணிக
வளாகத்தை திறந்துவைத்தும், 176 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.24
லட்சத்து 85 ஆயிரம் கடன் உதவியும், வேளாண்மைத்துறை மூலம் 45 லட்சத்து 416
ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கி பேசினார்.
ரூ.20 கோடி மதிப்பில்…
விழாவில் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் பேசியதாவது:–
தமிழக அரசு பதவி ஏற்ற 2 ஆண்டுகளில் 2 லட்சத்து 53 ஆயிரம் பேருக்கு இலவச
வீட்டுமனைப்பட்டா வழங்கி உள்ளது. மகளிர் மேம்பாட்டுக்காக திட்டங்கள்
செயல்படுத்தப்படுகிறது. அந்தியூர் பகுதியில் மணியாச்சி பள்ளத்தில் ரூ.10
கோடி செலவில் பாலம், ரூ.2 கோடி செலவில் தாலுகா கட்டிடம் கட்டப்பட்டு
வருகிறது.
அந்தியூர் தொகுதிக்கு மட்டும் ரூ.20 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை தமிழக அரசு வழங்கி உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் மாவட்ட வருவாய் அதிகாரி எஸ்.கணேஷ், கூட்டுறவு வீட்டு வசதி சங்க
தலைவர் மதிவாணன், மாவட்ட மாணவரணி தலைவர் சண்முகானந்தம், எம்.ஜி.ஆர். மன்ற
மாவட்ட இணை செயலாளர் முனுசாமிநாயுடு, பாலுசாமி, வெங்கடாசலம்,
இ.எம்.ஆர்.ராஜா மற்றும் அரசு அதிகாரிகள் கவுன்சிலர்கள் கலந்துகொண்டார்கள்.
முன்னதாக பேரூராட்சிகள் உதவி இயக்குனர் கலைவாணன் வரவேற்று பேசினார்.
முடிவில் பேரூராட்சி செயல் அதிகாரி கருப்பண்ணன் நன்றி கூறினார்.