தினமலர் 01.04.2010
நூறுசத வரிவசூல்: 4 பேரூராட்சிகள் சாதனை
திருவிடைமருதூர் : திருவிடைமருதூர் பகுதியில் உள்ள நான்கு பேரூராட்சிகள் வரி மற்றும் வரிஇல்லா இனங்கள் ஆகியவைகளை நிலுவையின்றி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. வரி என்பது பொதுமக்கள் அரசுக்கு செலுத்தும் பங்களிப்பாகும். இதனைக் கொண்டு அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்படுகிறது. வரி மற்றும் வரி இல்லா இனங்கள் என 2 வகைப்படும். சொத்துவரி, தொழில் வரி, என்பன வரி இனங்களாகும். இதேபோல் குடிநீர் கட்டணம், பேருந்து வசூல், சாலை ஓரக்கடைகள் வசூல், கடை லைசென்ஸ் மற்றும் உரிமக் கட்டணங்கள் ஆகியவை வரி இல்லா இனங்கள் ஆகும். இவ்விரு இனங்களையும் திருவிடைமருதூர், திருபுவனம், திருநாகேஸ்வரம், வேப்பத்தூர் ஆகிய பேரூராடசிகள் 2009-2010ம் ஆண்டிற்கு நிலுவையின்றி வசூல் செய்து சாதனை படைத்துள்ளன. இத்தகவலை திருவிடைமருதூர், திருபுவனம், திருநாகேஸ்வரம், வேப்பத்தூர் பேரூராட்சி செயல் அலுவலர்கள் ஆனந்தன், சுரேஷ், சுந்தரமூர்த்தி, ராஜன் ஆகியோர் தெரிவித்தனர்.