தினகரன் 17.08.2010
ஆக்கிரமிப்பு அகற்றம் முடிந்தது அயனாவரம் 4 வழி சாலை இம்மாத இறுதியில் திறப்பு
சென்னை, ஆக. 17: அயனாவரம் சாலை 4 வழிப்பாதையாக மாற்றப்பட்டு இம்மாத இறுதியில் திறக்கப்படும் என்று மேயர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
கெல்லீசிஸ், அயனாவரம், மேடவாக்கம் குளச் சாலை ஆகிய இடங்களில் தினமும் காலை, மாலை நேரங்களில் அதிக அளவில் வாகன நெரிசல் ஏற்படுகிறது.
இதனால், பயணிகளும், பொது மக்களும் குறித்த நேரத்தில் பணிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது இந்த சாலை 15 முதல் 20 அடி அகலம் கொண்டதாக உள்ளது.
எனவே, அயனாவரம் மேடவாக்கம் சாலையிலிருந்து கீழ்ப்பாக்கம் நியு ஆவடி சாலையை இணைக்கும் இந்த சாலையை அகலப்படுத்த வேண்டும் என்று பொது மக்கள் நீண்ட நாளாக கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, 3 கி.மீட்டர் நீளமுள்ள இந்த சாலைய 50 அடி சாலையாக அகலப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் தொடங்கியுள்ளன. முதற்கட்டமாக அயனாவரம் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன.
அயனாவரம் சாலையில் உள்ள பெரும்பாலான ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி முடிந்துவிட்டது. கீழ்ப்பாக்கம் மன நல மருத்துவமனை காம்பவுண்ட் மற்றும் குடிநீர் வாரியம் ஆகிய இடங்களில் 50 கிரவுண்ட் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்காக குடிநீர் வடிகால் வாரியத்துக்கு ஸி52.24 லட்சமும், பொதுப் பணித் துறைக்கு ஸி72.39 லட்சமும் தரப்பட்டுள்ளது. கீழ்ப்பாக்கம் ராஜு தெருவில் மட்டும் ஆக்கிரமிப்புகளை இடிக்கும் பணி முடியவில்லை. அந்த பணி முடிந்ததும் சாலையை அகலப்படுத்தும் பணி தொடங்கும். இது குறித்து மேயர் மா.சுப்பிரமணியன் கூறும்போது, “அயனாவரம் சாலை மற்றும் ராஜராஜன் சாலை சுமார்
ஸி3 கோடி செலவில் 4 வழிப்பாதையாக மாற்றப்படுகிறது. மழைநீர் கால்வாய் அமைக்க ஸி1.73 கோடியும், சாலை விரிவாக்கம் செய்ய ஸி1.2 கோடியும் செலவிடப்பட்டுள்ளது. இந்த பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு இம்மாத இறுதிக்குள் 4 வழிப்பாதை திறக்கப்படும்” என்றார்.