தினகரன் 02.12.2010
மழைக்கு சேதமான சாலைகள் ரூ4 லட்சத்தில் சீரமைப்பு கீழக்கரை நகராட்சி தீர்மானம்கீழக்கரை, டிச. 2: கீழக்கரை நகராட்சி பகுதியில் சமீபத்திய மழைக்கு சேதமான சாலைகளை ரூ4 லட்சத்தில் சீரமைக்க கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி கூட்டம் தலைவர் பசீர்அகமது தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் ஜெய்னுதீன், பணி மேற்பார்வையாளர் மணி முன்னிலை வகித்தனர். கீழக்கரை நகரில் சமீபத்தில் பெய்த பலத்த மழையில் சாலைகள் சேதமடைந்து போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. ரூ4 லட்சம் நிதியில் சாலைகளை சீரமைக்கும் பணியை துவக்க அனைத்து கவுன்சிலர்கள் ஒப்புதலுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட் டது. மேலத்தெரு புதுபள்ளி எதிரே அமைக்கப்பட உள்ள ஹைமாஸ் விளக்கை 18 வாலிபர் தர்கா பகுதியில் வைக்க வேண்டுமென கவுன்சிலர் அப்துல் மாலிக் தீர்மானம் கொண்டு வந்தார்.
இதுதொடர்பாக கடந்த கூட்டத்தில் தீர்மானம் வைத்தபோது ஏன் மறுப்பு தெரிவிக்கவில்லை எனக்கூறி அவரது தீர்மானத்தை தலைவர் நிராகரித்தார். தீர்மானம் நிறைவேற்றாவிடில் கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக அப்துல் மாலிக் கூறியதால் பரபரப்பு நிலவியது. கூட்டத்தில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.