கரூர் நகராட்சிக்கு குடிநீர் கட்டண நிலுவை ரூ. 4 கோடி
கரூர் நகராட்சியில் குடிநீர் கட்டணம் ரூ. 4. 14 கோடி வசூலிக்கப்படாமல் உள்ளது.
கரூர் நகராட்சியில் கரூர் நகரம், தாந்தோணிமலை, இனாம் கரூர், சணப்பிரட்டி ஆகிய பகுதிகள் உள்ளன. இதில் மொத்தம் 48 வார்டுகள் உள்ளன. நகராட்சிப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வாங்கல், நெரூர் ஆகிய பகுதிகளில் காவிரியிலிருந்து குடிநீர் வழங்கப்படுகிறது.
நகராட்சி முழுவதும் குடிநீர் வழங்கும் பொதுக் குழாய்களைத் தவிர, வீடுகள், ஓட்டல்கள், கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்களுக்கு தனிப்பட்ட இணைப்பு மூலமும் குடிநீர் வழங்கப்படுகிறது. இதன்படி, கரூர் நகராட்சியில் மொத்தம் 37 ஆயிரம் குடிநீர் இணைப்புகள் உள்ளன.
இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக நகராட்சியில் குடிநீர் கட்டணம் பெருமளவில் வசூலிக்கப்படவில்லை. ஆள் பற்றாக்குறை உள்ளிட்டவை இதற்குக் காரணங்களாகக் கூறப்படுகின்றன.
இதுகுறித்து நகர்மன்றக் கூட்டங்களில் உறுப்பினர்கள் கேள்வியெழுப்பியபோது, அனைத்து நிலுவைக் கட்டணங்களையும் விரைந்து வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
கருர் நகராட்சியைப் பொருத்தவரை கடந்த மார்ச் 31 வரை வசூலிக்கப்படாமல் உள்ள குடிநீர் கட்டண விவரம்:
குடியிருப்புகள், ஓட்டல்கள், பள்ளி, கல்லூரிகள் – ரூ. 4,03,38,682. அரசு அலுவலகங்கள் – ரூ. 10,76,732. வழக்குத் தொடர்பாக நிலுவையில் உள்ள ரூ. 51,270 என மொத்தம் ரூ. 4,14,66,684. இந்தத் தொகையை வசூலிக்க நகராட்சி தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.