4–வது பைப்லைன் திட்டத்துக்கு பணிகளை மேற்கொள்ள அனுமதி மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம்
தூத்துக்குடி மாநகராட்சி 4–வது பைப்லைன் திட்டத்துக்கு பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கி மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மாநகராட்சி கூட்டம்
தூத்துக்குடி மாநகராட்சி அவசர கூட்டம் நேற்று காலை கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்துக்கு மேயர் சசிகலாபுஷ்பா தலைமை தாங்கினார். துணை மேயர் சேவியர், ஆணையாளர் சோ.மதுமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மேயர் சசிகலாபுஷ்பா பேசும் போது, தூத்துக்குடி மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை போக்க 4–வது பைப்லைன் திட்டத்தை தந்த முதல்–அமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறினார்.
ரூ.282¼ கோடி
கூட்டத்தில் தூத்துக்குடி மாநகராட்சியில் ரூ.282 கோடியே 44 லட்சம் மதிப்பில் செயல்படுத்தப்பட உள்ள குடிநீர் அபிவிருத்தி திட்டமான 4–வது பைப்லைன் திட்டத்துக்கு நிர்வாக அனுமதி பெறப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்த 6 பிரிவுகளாக பணிகளை மேற்கொள்ள டெண்டர் விடப்பட்டது. இதனை ஏற்று நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் மாநகராட்சி என்ஜினீயர் ராஜகோபாலன், மற்றும் அதிகாரிகள், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தி.மு.க. கவுன்சிலர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை.