நவீன எந்திரம் மூலம் சப்பாத்தி தயாரிக்க ரூ.4 கோடி ஒதுக்கீடு
சென்னையில் மாநகராட்சி மூலம் 200 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு காலையில் இட்லி சாம்பாரும், மதியம் சாம்பார் சாதம் மற்றும் தயிர் சாதமும் வினியோகிக்கப்படுகிறது. மாலையில் சப்பாத்தி வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
அதனை முதல்வர் ஜெயலலிதா ஏற்று சென்ற சட்டசபை கூட்டத்தில் காலையில் பொங்கலும், மாலையில் சப்பாத்தி- பருப்பும் வழங்கப்படும் என்று அறிவித்தார். அதன்படி அம்மா உணவகத்தில் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை ஒவ்வொரு உணவகத்திலும் 2 ஆயிரம் சப்பாத்தி மற்றும் பருப்பு கடைசல் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தினமும் 4 லட்சம் சப்பாத்திகளும் அதற்குண்டான பருப்பு கடைசலும் தயாரித்து பொது மக்களின் தேவையை பூர்த்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
நவீன எந்திரங்களை பயன்படுத்தி ஒரு மணிநேரத்தில் 3 ஆயிரம் சப்பாத்திகள் தயாரிக்க முடியும். இதன் மூலம் ஆட்கள் தேவையும், நேரமும் குறையும். இந்த நவீன எந்திரங்களை நிறுவ குறைந்தபட்சம் 3 மாதம் தேவைப்படும். எந்திரங்களை வாங்குவதற்காக மாநகராட்சி கூட்டத்தில் ரூ. 4 கோடி ஒதுக்க அனுமதி பெறப்பட்டுள்ளது. இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.