மலிவு விலை உணவகங்களில் சப்பாத்தி தயாரித்து வழங்க ஸீ4 கோடியில் நவீன இயந்திரம்
சென்னை, : மலிவு விலை உணவகங்களில் சப்பாத்தி தயாரிக்க ஸீ4 கோடியில் நவீன இயந்திரம் வாங்கப்படும் என்று மாநகராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி கூட்டம் மேயர் சைதை துரைசாமி தலைமையில் நேற்று நடந்தது. இதில், 44 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முக்கிய தீர்மானங்கள் வருமாறு:
* மாநகராட்சி சார்பில் 200 மலிவு விலை உணவகங்கள் திறக்கப்பட்டுள்ளன. காலையில் இட்லி, சாம்பார், மதியம் சாம்பார் சாதம், தயிர் சாதம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த உணவகங்களில் மாலையில் சப்பாத்தி, பருப்பு கடைசல் வழங்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதையேற்று மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை ஒவ்வொரு உணவகத்திலும் 2 ஆயிரம் சப்பாத்தி, பருப்பு கடைசல் என 200 உணவகங்களில் 4 லட்சம் சப்பாத்திகள், பருப்பு கடைசல் தயார் செய்து விற்பனை செய்யப்படும்.
6 பேர் கொண்ட மகளிர் சுயஉதவி குழுக்கள் மூலம் ஒரு மணி நேரத்துக்கு 50 சப்பாத்தி மட்டுமே தயாரிக்க முடியும். நவீன இயந்திரத்தை பயன்படுத்தி ஒரு மணி நேரத்தில் 3 ஆயிரம் சப்பாத்தி தயாரிக்க முடியும். இதன் மூலம் ஆட்கள் தேவையும், நேரமும் குறையும். நவீன இயந்திரங்களை நிறுவுவதற்கு குறைந்த பட்சம் 3 மாத காலம் தேவைப்படும். சப்பாத்தி மற்றும் பருப்பு கடைசல் தயாரிக்க தேவையான இயந்திரம் கொள்முதல் செய்ய ஸீ4 கோடி நிதி ஒதுக்கப்படும்.
* வேளச்சேரியை சேர்ந்த இஸ்லாமிய மக்கள் தற்சமயம் ராயப்பேட்டை வரை சென்று இறந்தவர்களை நல்லடக்கம் செய்து வருகின்றனர். எனவே, அவர்கள் தரமணி 100 அடி சாலையில் மயான வளாகத்தில் உள்ள ஒரு சிறிய காலி குட்டையை மயான பூமியாக பயன்படுத்த அனுமதி வழங்கப்படும்.