தினத்தந்தி 23.09.2013
சேலம் மாநகராட்சி பகுதியில் ஏ.டி.எஸ்.கொசுவை ஒழிக்க பயனற்ற 4 டன் டயர்கள் அகற்றம்
சேலம் மாநகராட்சி பகுதியில் ஏ.டி.எஸ். கொசுவை ஒழிக்கும் வகையில் பயனற்ற 4 டன் டயர்கள் அகற்றப்பட்டன.
கொசு ஒழிப்பு தீவிரம்
மழை காலங்களில் கொசுக்களின் உற்பத்தியை
தடுத்து டெங்கு காய்ச்சல் நோய் பரவுவதை தடுக்க சேலம் மாநகராட்சி சார்பில்
பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த வாரம் துப்புரவு
பணியாளர்கள் மற்றும் சுகாதார அலுவலர்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் நேரில்
சென்று வீட்டில் சேகரித்து வைக்கப்பட்ட தேவையற்ற பொருட்களை பெற்று
மாநகராட்சி லாரிகள், டிராக்டர்கள், ஆட்டோக்கள், மற்றும் கைவண்டிகள் மூலமாக
பெறப்பட்டது.
மேலும் ஏடிஸ் கொசுப்புழு ஒழிப்பதற்கான
அபேட் மருந்து அனைத்து வீடுகளிலும் தேக்கி வைக்கப்பட்டுள்ள நல்ல நீரில்
தெளிக்கப்பட்டது. தொடர்ந்து நகரின் பல்வேறு பகுதிகளில் ஏடிஸ் கொசுக்கள்
உற்பத்திக்கு முக்கிய காரணமாக விளங்கும் பழைய டயர்களை அப்புறப்படுத்திட
மாநகராட்சி ஆணையாளர் அசோகன் சுகாதாரத் துறைக்கு உத்தரவிட்டார்.
4 டன் டயர்கள் அகற்றம்
அதனைத் தொடர்ந்து நேற்று மாநகராட்சி நகர்
நல அலுவலர் டாக்டர் அர்ஜீன்குமார் தலைமையில் சுகாதாரத் துறையினர்
சூரமங்கலம் மற்றும் அம்மாபேட்டையில் உள்ள அனைத்து பகுதிகளிலும் ஆய்வு
செய்தனர். தெருக்களிலும், ரோட்டோரங்களிலும் பயன்பாடற்று குவித்து
வைக்கப்பட்டிருந்த 4 டன் எடையுள்ள பழைய டயர்களை அப்புறப்படுத்தி
வாகனங்களில் எடுத்து சென்றனர்.
இந்த ஆய்வில் சுகாதார ஆய்வாளர்கள்
வெங்கடாஜலம், கந்தசாமி, மலேரியா களப்பணி உதவியாளர் செல்வம் மற்றும்
களப்பணியாளர்கள் ஆகியோர் ஈடுபட்டனர்.
இது குறித்து மாநகராட்சி ஆணையாளர் அசோகன் கூறியதாவது:–
வேண்டுகோள்
பொதுமக்கள், வியாபரிகள், வாகன பணிமனைகள்
வைத்திருக்கும் உரிமையாளர்கள் ஆகியோர் பயன்பாடற்ற பழைய டயர்களை
வீட்டிற்குள்ளோ அல்லது வெளியிலோ வைத்திருக்க வேண்டாம். ஏடிஸ் கொசுக்கள்
இனப்பெருக்கத்திற்கு புகழிடமாக விளங்கும் பயன்பாடற்ற டயர்களை மாநகராட்சி
பணியாளர்கள் உங்கள் இல்லம் அல்லது கடையை நாடி வரும்ப்போது ஒப்படைத்து
டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க உங்களுடைய முழு ஒத்துழைப்பை வழங்குமாறு
கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.