தி இந்து 24.03.2017
தூத்துக்குடியை மிரட்டும் டெங்கு காய்ச்சல்:
சென்னையில் இருந்து சிறப்பு குழுக்கள் வருகை – 4 வார்டுகளில் ஒருங்கிணைந்த
கூட்டு தடுப்பு பணி

தூத்துக்குடியில் டெங்கு ஒழிப்பு பணிகள் குறித்து நடைபெற்ற ஆலோசனைக்
கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் ம.ரவிக்குமார் பேசினார். படம்: என்.ராஜேஷ்.
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் டெங்கு காய்ச்சல் தொடர்ந்து வேகமாக பரவி
வருவதைத் தொடர்ந்து, உயர்மட்ட அதிகாரிகள் குழுவினர் தூத்துக்குடியில்
முகாமிட்டு டெங்கு தடுப்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர். மாநகராட்சியில்
நேற்று நான்கு வார்டு பகுதியில் ஒருங்கிணைந்த கூட்டு டெங்கு தடுப்புப்
பணிகள் நடைபெற்றன.
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் கடந்த 2 மாதங்களாக டெங்கு காய்ச்சல்
வேகமாக பரவி வருகிறது. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும்
தனியார் மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு
அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரு கிறது. சராசரியாக 100 பேர்
வரை மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை குழு
மாநகராட்சி சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற் கொண்ட போதிலும்,
டெங்கு காய்ச்சல் தொடர்ந்து பரவி வருகிறது. சென்னையில் இருந்து சுகாதார
துறை இணை இயக்குநர்கள் சரவணன் (கொள்ளை நோய்), பிரேம்குமார் (தொற்றுநோய்),
முதன்மை பூச்சியியல் வல்லுநர் அப்துல் காதர் ஆகியோர் தலைமையிலான உயர்
அதிகாரிகள் குழுவினர் தூத்துக்குடியில் முகாமிட்டு டெங்கு தடுப்பு பணிகளை
தீவிரப்படுத்தியுள்ளனர்.
ஒருங்கிணைந்த பணி
இதையடுத்து மாநகராட்சியில் உள்ள 4 மண்டலங்களிலும் தலா ஒரு வார்டு தேர்வு
செய்யப் பட்டு, ஒருங்கிணைந்த கூட்டு டெங்கு தடுப்பு பணி நேற்று
மேற்கொள்ளப்பட்டது.
வடக்கு மண்டலத்தில் 3-வது வார்டுக்கு உட்பட்ட ராஜகோபால் நகர், பாரதி நகர்,
நிகிலேசன் நகர், பால்பாண்டிநகர் பகுதிகள், மேற்கு மண்டலத்தில் 34-வது
வார்டுக்கு உட்பட்ட தபால் தந்தி காலனி, கிழக்கு மண்டலத்தில் 20-வது
வார்டுக்கு உட்பட்ட திரேஸ்புரம், தெற்கு மண்டலத்தில் 49-வது வார்டுக்கு
உட்பட்ட வள்ளிநாயகிபுரம் பகுதியில் இந்த பணி நடைபெற்றது.
வீடு வீடாக பணியாளர்கள் சென்று டெங்கு கொசு ஆதாரங் களை கண்டறிந்து
அழித்தனர். கொசுப் புழுக்களை அழிக்க அபேட் மருந்து தெளித்தனர். வீடுகளுக்கு
உள்ளேயும், வெளியேயும் புகை மருந்து அடிக்கப்பட்டது. அனைத்து பகுதிகளிலும்
பொதுமக்களுக்கு இலவசமாக நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.
மருத்துவ முகாம்கள்
மேலும், 4 வார்டு பகுதிகளிலும் இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டு,
காய்ச்சல் உள்ளவர்கள் பரிசோதிக்கப்பட்டு மருந்து மாத்திரைகள் வழங்கப்
பட்டன. தபால் தந்தி காலனியில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
மாநகராட்சி ஊழியர்கள் மட்டுமின்றி, பல்வேறு செவிலியர் கல்லூரி மாணவியரும்,
நகரில் வீடுகள் தோறும் சென்று டெங்கு விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர்.
இந்த பணிகளை மாநகராட்சி ஆணையர் கே.ராஜாமணி தொடங்கி வைத்தார். சென்னையில்
இருந்து வந்துள்ள இணை இயக்குநர்கள் சரவணன், பிரேம்குமார், முதன்மை
பூச்சியியல் வல்லுநர் அப்துல் காதர் மற்றும் மாநகர நல அலுவலர் பிரதீப்
வி.கிருஷ்ணகுமார், 4 துணை இயக்குநர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து
கொண்டனர்.
இதுபோன்ற ஒருங்கிணைந்த கூட்டு தடுப்பு பணிகள் தொடர்ந்து நடைபெறும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்..
ஆலோசனைக் கூட்டம்
டெங்கு காய்ச்சல் பரவாமல் கட்டுப்படுத்துவது குறித்து மாவட்ட ஆட்சியர்
ம.ரவிக்குமார் அவசர ஆலோசனை நடத்தினார். மாநகராட்சி ஆணையர் கே.ராஜாமணி
முன்னிலை வகித்தார். கூட்டத்தில் ஆட்சியர் பேசியதாவது:
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த 500
பேர் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். 60 வார்டுகளிலும், தலா
ஒரு சுகாதார ஆய்வாளர் மேற்பார்வையில் மூன்று கொசு ஒழிப்பு பணியாளர்கள்
பணிபுரிகின்றனர். முக்கிய இடங்களில் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டு
வருகிறது.
சிமென்ட் குடிநீர் தொட்டியில் மூடி போடாமல் இருந்தாலோ, குடிநீர்
தொட்டியிலிருந்து கழிவு நீர் வெளியேறும் வண்ணம் குழாய் இல்லாமல் இருந்தாலோ
சம்பந்தப்பட்ட வீட்டில் குடிநீர் இணைப்பு உடனடியாக துண்டிக்கப்படும்.
அபராதம் விதிக்கப்படும். தனியார் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம்
செய்யும் போது கண்டிப்பாக குளோரின் கலந்து வழங்க வேண்டும். என்றார் அவர்.