தினகரன் 01.06.2010
தமிழில் எழுதப்படாத 40 ஆயிரம் கடைகளின் பெயர் பலகை அகற்றம் இன்று முதல் நடவடிக்கை
சென்னை, ஜூன் 1: தமிழில் பெயர் பலகை வைக்காத 40 ஆயிரம் கடைகளின் பெயர் பலகைகளை இன்று முதல் அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
சென்னையில் உள்ள கடைகள் மற்றும் நிறுவனங்களின் பெயர் பலகைகள் தமிழில் பெரிதாகவும், ஆங்கிலத்தில் சிறியதாகவும் இருக்க வேண்டும் என்று ஏப்ரல் 1ம் தேதி மேயர் மா.சுப்பிரமணியன் அறிவித்தார். ஆங்கில வார்த்தை பெரிதாக உள்ள பெயர் பலகையை மாற்ற மே 31ம் தேதி வரை காலக்கெடுவும் நிர்ணயிக்கப்பட்டது. தமிழில் எழுதப்படாத கடைகளின் பெயர் பலகைகள் ஜூன் 1ம் தேதி முதல் அகற்றப்படும் என எச்சரிக்கப்பட்டது.
தமிழில் பெயர் பலகை வைக்க மயிலாப்பூர், அண்ணாநகர், புரசைவாக்கம், திருவல்லிக்கேணி, சைதாப்பேட்டை, அடையார், ஈக்காட்டுதாங்கல் பகுதி வணிகர் சங்க தலைவர்கள் ஆதரவு தெரிவித்திருந்தனர். வியாபாரிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த ஏப்ரல் 15ம் தேதி தி.நகர், ஜி.என்.செட்டி சாலையில் உள்ள சர்.பிட்டி, தியாகராயர் அரங்கத்தில் மேயர் தலைமையில் வணிக நிறுவன சங்கங்களுடன் கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்தில் கலந்து கொண்ட வணிகர்கள் தங்களது கடை பெயர் பலகைகளை தமிழில் வைக்க முழு ஆதரவு தெரிவித்தனர். மேலும் விழிப்புணர்வு ஏற்படுத்த அனைத்து கடைகளுக்கும் மாநகராட்சி சார்பில் துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.
மாநகராட்சி அறிவித்துள்ள கெடு நேற்றுடன் முடிவடைந்ததால், இன்று முதல் தமிழில் பெயர் பலகை இல்லாத கடைகளின் பெயர் பலகைகள் அகற்றப்பட உள்ளன.
இதுகுறித்து மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘சென்னையில் மொத்தம் 75 ஆயிரம் கடைகள் உள்ளன. இதில் 15 ஆயிரம் கடைகளில் ஏற்கனவே தமிழ் பெயர் பிரதானமாக உள்ளது. தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும் என்று மாநகராட்சி அறிவித்தபிறகு ஏப்ரல் 1ம் தேதி முதல் நேற்று வரை 20 ஆயிரம் கடைகளில், ஏற்கனவே இருந்த ஆங்கில பெயர் மாற்றப்பட்டு, தமிழ் பெயர் எழுதப்பட்டுள்ளது. எனினும் சுமார் 40 ஆயிரம் கடைகளில் தொடர்ந்து ஆங்கில பெயர்களே பிரதானமாக உள்ளதாக மாநகராட்சி கண்டறிந்துள்ளது. இந்த கடைகளின் பெயர் பலகைகள் 1ம் தேதி (இன்று) காலை முதல் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் மாநகராட்சி ஊழியர்கள் உதவியுடன் அகற்றப்படும்” என்றார்.