ஒண்டிப்புலி நீர்தேக்கத்தில் 40 அடி நீர் விருதுநகரில் குடிநீர் பிரச்னை இருக்காது
விருதுநகர்: “கோடை காலத்தில் விருதுநகரில் குடி தண்ணீர் பிரச்னை ஏற்படாமல் இருக்க, ஒண்டிப்புலி நீர்த்தேக்கத்தில், 40 அடி ஆழத்தில் தண்ணீர் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் ஏப்., கடைசி வரை குடிநீர் பிரச்னைக்கு வாய்ப்பில்லை,” என, கமிஷனர் கூறினார்.
விருதுநகர் நகராட்சி பகுதியில் 72 ஆயிரத்து 144 பேர் வசிக்கின்றனர். ஒருவருக்கு தினம் 90 லிட்டர் வீதம், 65 லட்சம் லிட்டர் தேவைப்படுகிறது. தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் 25 லட்சம் லிட்டர், ஆனைக்குட்டம், கார்சேரி கல் குவாரி மூலம் 27 லட்சம் லிட்டர் தண்ணீர், விருதுநகருக்கு தினமும் வருகிறது. இதை பம்ப் செய்து, குடிநீர் தொட்டிகளில் சேமித்து வினியோகம் செய்கின்றனர். வார்டுகளில்ஐந்து நாட்களுக்கு ஒரு முறை குடி நீர் சப்ளை செய்யப்படுகிறது.
மேலும், விருதுநகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்கு, 85 அடி ஆழம் கொண்ட ஒண்டிப்புலி நீர்த்தேக்கத்தில், மழை நீரும் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. இதில் தற்போது 40 அடி ஆழம் வரை தண்ணீர் கையிருப்பு உள்ளது. 45 அடி ஆழம் கொண்ட கார்சேரி கல் குவாரியில், 19 அடி ஆழத்தில் தண்ணீர் உள்ளது.
ஒண்டிப்புலி நீர்த்தேக்கத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ள நீரால், கோடை காலத்தில் தண்ணீர் பிரச்னைக்கு வாய்ப்பில்லை. கமிஷனர் (பொறுப்பு) சேர்மக்கனி, “விருதுநகருக்கு தினமும் 52 லட்சம் லிட்டர் தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது. ஒண்டிப்புலி நீர்தேக்கத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ள தண்ணீரால், கோடை காலத்தில் ஏப்., வரை பிரச்னை வர வாய்ப்பில்லை. இதற்கிடையில் கோடை மழை பெய்தால், குடி தண்ணீர் பிரச்னையே இருக்காது,” என்றார்.