தினமணி 24.09.2010
400 மீ ஓட்டப் பந்தயம்: மேயர் முதலிடம்
சென்னை, செப். 23: சென்னையில் நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற சென்னை மாநகராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு இடையேயான 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் மேயர் மா. சுப்பிரமணியன் முதலிடம் பிடித்தார்.
சென்னை மாநகாரட்சி உருவாகி 322 ஆண்டுகள் நிறைவு பெறுவதையொட்டி, மாநகராட்சி ஊழியர்களிடையே ஒற்றுமை மற்றும் தேசிய ஒருமைப்பாட்டை உருவாக்கும் வகையில் அவர்களுக்கு இடையில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
வியாழக்கிழமை தொடங்கிய நிகழ்ச்சியில் 50 மீ, 100 மீ, 200 மீ மற்றும் 400 மீ ஓட்டப் பந்தயங்கள் நடத்தப்பட்டன.
இதில் 400 மீ ஓட்டப் பந்தயத்தில் மேயர் மா. சுப்பிரமணியன் பங்கேற்று முதல் இடத்தைத் தட்டிச் சென்றார். இரண்டாவது இடத்தை கவுன்சிலர் கணேசனும், 3-வது இடத்தை கவுன்சிலர் பாலகிருஷ்ணனும் பிடித்தனர்.
வெள்ளிக்கிழமை கவுன்சிலர்களுக்கு கைப்பந்து, கூடைப்பந்து, கிரிக்கெட், எறிபந்து, டென்னிகாய்ட் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்படுகின்றன. மாநகராட்சி அலுவலர்களுக்கு கால்பந்து, எறிபந்து மற்றும் தட கள போட்டிகள் நடத்தப்படுகின்றன.
வரும் 27-ம் தேதி அகில இந்திய மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
நூற்றாண்டை நெருங்கும் மாநகராட்சி ரிப்பன் கட்டடத்தின் சிறப்பை எடுத்துரைக்கும் வகையில், வரும் 29-ம் தேதி சிறப்பு தபால் உறை வெளியிடப்பட உள்ளது.