தினத்தந்தி 09.10.2013
சென்னை புறநகரில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற ரூ.400 கோடியில் பணிகள் மேயர் சைதை துரைசாமி தகவல்

சென்னை புறநகரில் அடிப்படை வசதிகள் நிறைவேற்ற ரூ.400 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடப்பதாக மேயர் சைதை துரைசாமி கூறினார்.
திறப்பு விழா
சென்னை மாநகராட்சி பெருங்குடி மண்டலம்
பெருங்குடி பகுதியில் உயர்நிலைப்பள்ளிக்கு ரூ.20 லட்சம் செலவில் புதிய
வகுப்பறைகள் கட்டப்பட்டன. இதன் திறப்பு விழா காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர்
சித்ரசேனன் தலைமையில் நடந்தது.
சிட்லபாக்கம் ராஜேந்திரன் எம்.பி.,
பரங்கிமலை ஒன்றிய தலைவர் என்.சி.கிருஷ்ணன், மண்டல தலைவர் கொட்டிவாக்கம்
ராஜாராம், கவுன்சிலர்கள் அமுதா வெங்கடேசன், ஜானகிராமன் முன்னிலை வகித்தனர்.
கே.பி.கந்தன் எம்.எல்.ஏ. வரவேற்றார். புதிய பள்ளி கட்டிடங்களை அமைச்சர்
சின்னையா, சென்னை மாநகர மேயர் சைதை துரைசாமி ஆகியோர் திறந்து வைத்தனர்.
விழாவில் மேயர் சைதை துரைசாமி பேசியதாவது:–
ரூ.400 கோடியில் பணிகள்
சென்னை மாநகராட்சியில் முதல்–அமைச்சரின்
உத்தரவிற்கிணங்க பல்வேறு அடிப்படை வசதிகள் முறையாக செய்யப்பட்டு வருகிறது.
பெருங்குடி, சோழிங்கநல்லூர் ஆகிய 2 மண்டலங்களில் தரமான சாலைகள், மழைநீர்
கால்வாய்கள், தெருவிளக்குகள், பூங்கா என அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு
உள்ளது.
இதற்காக ரூ.400 கோடி நிதி ஒதுக்கப்பட்டு
பணிகள் நடந்து வருகிறது. தானத்தில் கல்வி தானம் சிறந்தது என்பார்கள்.
அதுபோல் இந்த பள்ளிக்கு புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளது. வருங்கால
சமுதாயம் சிறந்த கல்வியுடன் வளரவேண்டும் என்ற முதல்–அமைச்சரின் கனவை
நனவாக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் மாநகராட்சி கவுன்சிலர்கள்
ஜெ.கே.ஜெயசந்திரன், பாஸ்கரன், ஜெ.கே.மணிகண்டன், ஒன்றிய செயலாளர்
டி.வி.நாராயணன், கோவிலம்பாக்கம் மணிமாறன், சித்தாலபாக்கம் தாமோதரன்,
ஒட்டியம்பாக்கம் ஊராட்சி துணை தலைவர் வீரபாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.