தினமணி 12.11.2009
திருவோணத்தில் நாளை ரூ. 40.15 கோடியிலான திட்டப் பணிகளை ஸ்டாலின் தொடக்கிவைக்கிறார்
தஞ்சாவூர், நவ. 11: தஞ்சாவூர் மாவட்டம், திருவோணத்தில் வெள்ளிக்கிழமை (நவ. 13) நடைபெறவுள்ள சமத்துவபுரம் திறப்பு, மகளிர் குழுக்களுக்கு சுழல் நிதி அளிப்பு உள்ளிட்ட விழாவில் ரூ. 40.15 கோடியிலான திட்டப் பணிகளை துணை முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டி தொடக்கிவைக்கிறார்.
இந்த நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தில் பொது விநியோகக் கட்டடம், சமுதாயக்கூடம் உள்ளிட்ட 6 பணிகள் ரூ. 20.42 லட்சத்தில் தொடங்கப்படுகின்றன.
அங்கன்வாடி, மயான கொட்டகை உள்ளிட்ட 10 பணிகள் ரூ. 26 லட்சத்தில் தொடங்கப்படுகின்றன. ஊராட்சி ஒன்றியக் கட்டடங்கள் இரு இடங்களில் ரூ. 3.44 கோடியில் தொடங்கப்படுகின்றன. வல்லம் போரூராட்சியில் ஊரக உள் கட்டமைப்பு திட்டப் பணிகள் ரூ. 20 லட்சத்தில் தொடங்கப்படுகின்றன. பள்ளிக் கட்டடங்கள், கழிப்பறை வசதி, தண்ணீர் வசதி, சுற்றுச்சுவர், ஆய்வகக் கட்டடம் மற்றும் ஆரம்ப சுகாதார கட்டடம் போன்ற பணிகள் ரூ. 20.44 கோடியில் தொடங்கப்படுகின்றன.
கல்வித் துறை மூலம் இரு பள்ளிக் கட்டடங்கள் ரூ. 2.58 கோடியில் கட்டப்படுகின்றன. அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளிகளில் ஒன்று மற்றும் இரண்டு வகுப்பறைக் கட்டடங்கள், குடிநீர் வசதி, கழிப்பறை வசதிகள் மேற்கொள்ள ரூ. 2.28 கோடியில் பணிகள் தொடங்கப்படுகின்றன.
நகரக் குடிநீர் திட்டத்தின் கீழ், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, தரைமட்டக் கிணறு உள்ளிட்ட பணிகள் ரூ. 9.95 கோடியில் தொடங்கப்படுகின்றன. சமத்துவபுரம், சுனாமி குடியிருப்பு வீடுகள், நூலகக் கட்டடம், வணிக வளாகம், சமுதாயக்கூடம், பொது விநியோகக் கட்டடம், நெல் கொள்முதல் நிலையக் கட்டடம், பயணிகள் நிழல்குடை, மருத்துவமனைக் கட்டடம், மாவட்டப் பதிவாளர் அலுவலகம் உள்ளிட்ட ரூ. 58.14 கோடியில் நிறைவேற்றப்பட்ட 673 திட்டங்களையும் ஸ்டாலின் தொடக்கி வைக்கிறார்.
வீடுகள், இலவச மனைப் பட்டா, திருமண நிதியுதவி, தையல் இயந்திரம், சலவைப் பெட்டி, மூன்று சக்கர மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட ரூ. 8 கோடி மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை 2,684 பயனாளிகளுக்கு ஸ்டாலின் வழங்குகிறார்.
திருவோணம் சந்தைத் திடலில் நடைபெறும் இந்த விழாவிற்கு கூட்டுறவுத் துறை அமைச்சர் கோ.சி. மணி தலைமை வகிக்கிறார். மத்திய நிதித் துறை இணை அமைச்சர் எஸ்.எஸ். பழநிமாணிக்கம், தமிழக வணிக வரித் துறை அமைச்சர் சி.நா.மீ. உபயதுல்லா ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். மாவட்ட ஆட்சியர் எம்.எஸ். சண்முகம் வரவேற்றுப் பேசுகிறார். சட்டப்பேரவைஉறுப்பினர்கள் துரை. சந்திரசேகரன் (திருவையாறு), கி.த. மகேஷ்கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்