தினமணி 11.02.2016
ரூ. 41 லட்சத்தில் அமைக்கப்பட்ட பூங்கா திறப்பு
பூந்தமல்லி நகராட்சி 7-ஆவது
வார்டில் ரூ.41 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட பூங்காவை அமைச்சர்கள்
பி.வி.ரமணா, எஸ்.அப்துல் ரஹீம் ஆகியோர் திறந்து வைத்தனர்.
பூந்தமல்லி நகராட்சி 7-ஆவது வார்டுக்கு உள்பட்ட
எம்.எஸ்.வி.நகர், சின்னப்பா நகர் பகுதியில் சென்னை பெருநகர் வளர்ச்சிக்
குழும நிதியில் இருந்து ரூ.41 லட்சம் மதிப்பில் பூங்கா அமைக்கப்பட்டது.
இதன் திறப்பு விழா நகர்மன்ற உறுப்பினர் தனலட்சுமி
கோபிநாத் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் தமிழக பால்வளத் துறை
அமைச்சர் பி.வி.ரமணா பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை
அமைச்சர் எஸ்.அப்துல்ரஹீம் ஆகியோர் கலந்து கொண்டு பூங்காவைத் திறந்து
வைத்தனர்.
குமணன்சாவடி பேருந்து நிறுத்தம் பகுதியில் ரூ.15 லட்சம்
செலவில் அமைக்கப்பட்ட நம்ம டாய்லட், மேல்மா நகர் பகுதியில் ரூ.9
லட்சத்தில் கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டடம் ஆகியவற்றையும் அமைச்சர்கள்
திறந்து வைத்தனர்.
இவ்விழாக்களில் பூந்தமல்லி எம்எல்ஏ மணிமாறன், ஒன்றியக்
குழுத் தலைவர் திருநாவுக்கரசு, கூட்டுறவு சங்கத் தலைவர் கே.எஸ்.
ரவிச்சந்திரன், நிலவள வங்கித் தலைவர் ஜாவித் அகமது, நகரச் செயலாளர்
தேவேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.