தினமலர் 18.04.2013
தடை மீறி வளர்க்கப்பட்ட 42 பன்றிகளுக்கு “சிறை’
உடுமலை:தடையை மீறி வளர்க்கப்பட்ட பன்றிகளை, நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் அப்புறப்படுத்தினர்.
உடுமலை நகராட்சி குடியிருப்பு பகுதிகளில் பன்றிகள் வளர்க்க கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, நகர் நல அலுவலர் (பொறுப்பு) இளங்கோவன், மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
பன்றிகள் வளர்க்கப்படுகிறதா என, பழனியாண்டவர் நகர், அமீர் லே-அவுட், சவுதாமலர் லே-அவுட், அனுசம் நகர், சாதிக்நகர், பெரியார் காலனி உள்ளிட்ட பகுதிகளில், ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
தடையை மீறி வளர்க்கப்பட்ட பன்றிகள், மதுரையிலிருந்து அழைத்து வரப்பட்ட குழுவினர் மூலம் பிடிக்கப்பட்டன. இதில், 42 பன்றிகள் பிடிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டன. இவ்வாறு, அவர்கள் கூறினர்.