தினத்தந்தி 02.01.2014
வடவள்ளி, கவுண்டம்பாளையம் பகுதியில் கூடுதல் குடிநீருக்கு ரூ.42½ கோடி திட்டம்

பில்லூர் 2-வது கட்ட குடிநீர் திட்டம், ஆழியாறு கூட்டு குடிநீர் திட்டம்
மூலம் வடவள்ளி, வீரகேரளம், கவுண்டம்பாளையம் பகுதிகளுக்கு கூடுதல் குடிநீர்
வழங்க ரூ.42½ கோடி திட்டத்தை கோவை மாநகராட்சி தயாரித்து அரசின்
ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது.
குடிநீர் பிரச்சினை
கோவை வடவள்ளி, கவுண்டம்பாளையம் பகுதியில் குடியிருப்புகள் பெருகி உள்ளன,
இந்த பகுதியில் நீண்ட நாட்களுக்கு முன் பதிக்கப்பட்ட சிறிய குழாய்கள்
இருப்பதால் கூடுதல் குடிநீர் வழங்க முடியவில்லை. இதனால் அணைகளில் தண்ணீர்
இருந்தபோதிலும் குறைந்த அளவே குடிநீர் வழங்க முடிகிறது. இந்த பிரச்சினையை
தீர்ப்பதற்காக பில்லூர் 2-வது கட்ட திட்டத்தின் மூலம் வடவள்ளி,
கவுண்டம்பாளையம் பகுதிகளுக்கு கூடுதல் குடிநீர் வழங்க புதிய திட்டம்
தயாரிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோவை மாநகராட்சி தயாரித்துள்ள திட்ட விவரம் வருமாறு:-
பில்லூர், ஆழியாறு குடிநீர்
கோவை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ள பகுதிகளான கவுண்டம்பாளையம்,
வடவள்ளி, வீரகேரளம் பகுதிகளுக்கு கூடுதல் குடிநீர் வழங்க முடிவு
செய்யப்பட்டுள்ளது. இதன்படி பில்லூர் 2-வது குடிநீர் திட்டம், ஆழியாறு
குடிநீர் திட்டத்துடன் குழாய் அமைத்து இணைத்தல் பகுதிகளுக்கு உத்தேச
மதிப்பீடாக ரூ.16.87 கோடி செலவில் பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த பணிகளை 5 பிரிவுகளாக பிரித்து செயல்படுத்தவும் நகராட்சி நிர்வாக
ஆணையகத்துக்கு நிர்வாக அனுமதி, தொழில்நுட்ப அனுமதி அளிக்க கோரப்பட உள்ளது.
ரூ.42½ கோடி திட்டம்
தமிழ்நாடு குடிநீர் முதலீட்டு கழகத்தின் மூலம் இந்த திட்டத்துக்கு விரிவான திட்ட அறிக்கை தயார் செய்து சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
கவுண்டம்பாளையம் வார்டு எண்கள்-5, மற்றும் 6, வார்டு எண்கள்-7, 8
மற்றும் 9 ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் குழாய் பதிக்கும் பணிகளுக்கு ரூ.12
கோடியே 41 லட்சம் செலவிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
பில்லூர் 2-வது குடிநீர் திட்டம் மற்றும் ஆழியாறு குடிநீர் திட்டத்துடன்
குழாய் அமைத்து இணைக்கும் பணிக்கு ரூ.8 கோடியே 74 லட்சம் செலவிடவும்,
வீரக்கேரளம் வார்டு எண்கள்-18, மற்றும் 19 பகுதிகளுக்கு ரூ.9 கோடியே 91
லட்சம் செலவிடவும், வடவள்ளி வார்டு எண்கள் 16 மற்றும் 17 ஆகிய பகுதிகளுக்கு
ரூ.11 கோடியே 79 லட்சம் செலவிடவும் மொத்தம் ரூ.42 கோடியே 55 லட்சம்
செலவில் அனைத்து பணிகளையும் முடித்து கூடுதல் குடிநீர் வழங்க முடிவு
செய்யப்பட்டுள்ளது. இதற்கான தீர்மானம் கோவை மாநகராட்சி கூட்டத்தில் ஒரு
மனதாக நிறைவேற்றப்பட்டது. இதன்பின்னர் இந்த திட்டவரைவு அறிக்கை அரசுக்கு
அனுப்பப்பட உள்ளது.
ரூ.42½ கோடி திட்டத்தில் ரூ.11.13 கோடி மத்திய அரசின் மானியமாக
கிடைக்கிறது. மீதி தொகையான ரூ.31.41 கோடியை அரசு மானியமாகவும், பொது
நிதியின் மூலம் பெறவும், இந்த திட்டத்தினை திட்ட மேலாண்மை குழுவின் மூலம்
பணிகள் மேற்பார்வையிட விருப்ப அறிக்கை கோரி தேர்வு செய்ய மாநகராட்சி
கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்த திட்டத்தை விரைவில் நிறைவேற்றப்பட்டால் கவுண்டம்பாளையம்,
கவுண்டம்பாளைம், வீரகேரளம் பகுதிகளில் குடிநீர் பிரச்சினை தீர வாய்ப்பு
ஏற்படும்.