தினகரன் 26.07.2010
பாண்டி பஜாரில் ரூ4.3 கோடியில்நடைபாதை வியாபாரிகளுக்கு பிரமாண்ட வணிக வளாகம் நடிகர் & நடிகைகளை கவர்ந்த பாண்டி பஜார் & பனகல் பார்க் மு.க.ஸ்டாலின் திறக்கிறார்
சென்னையில் அனைத்து வகையான காய்கறி, பழங்கள் புத்தம் புதிதாக கிடைக்கும் இடம் ‘பனகல் பார்க் காய்கறி மார்க்கெட்’, ‘பாண்டிபஜார் மார்க்கெட்’ ஆகும். அந்த காலங்களில் பெரிய, பெரிய பணக்காரர்கள், பிரபலமான நடிகர்&நடிகைகள் இங்குதான் காய்கறி, பழங்கள் வாங்க கார்களில் வருவார்கள். சாதாரணமானவர்கள் இந்த 2 இடங்களில் காய்கறி, பழங்கள் வாங்கமுடியாத அளவுக்கு விலை அதிகமாக இருக்கும். இப்படி காய்கறி, பழங்களுக்கு பெயர் போன பனகல் மார்க்கெட் முதலில் ஓலைக் கொட்டையாகத்தான் காட்சியளித்தது. மாநகராட்சிக்கு சொந்தமான அந்த இடம் பின்னாளில் கட்டிடமாக மாறியது. பாண்டிபஜார் மார்க்கெட்டும் மாநகராட்சிக்கு சொந்தமான இடமாகும். அந்த இடத்தில்தான் இப்போது வணிக வளாகம் உருவாகி வருகிறது.
சென்னை, ஜூலை 26: நடைபாதை வியாபாரிகளுக்காக முதல் முறையாக, மாநகராட்சி சார்பில் பாண்டி பஜாரில்
ரூ4.3 கோடி செலவில் பிரமாண்டமான வணிக வளாகம் கட்டப்படுகிறது. இந்த பணி இம்மாத இறுதியில் முடியவுள்ளது. இதை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் திறந்து வைக்கிறார் என்று மேயர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னையை சிங்கார சென்னையாக மாற்றும் பணியின் ஒரு பகுதியாக நடைபாதைகளில் அழகிய சலவை கற்கள், டைல்ஸ்கள் பதிக்கப்பட்டு வருகிறது. இது தவிர பார்வையற்றவர்கள் நடைபாதையில் நடந்து செல்லும் வகையில் அவர்களுக்கென வடிவமைக்கப்பட்ட சிறப்பு டைல்ஸ்கள் முக்கிய சாலைகளின் நடைபாதைகளில் பதிக்கப்பட்டும் வருகிறது.
இப்படி, மாநகராட்சி கோடி கணக்கில் செலவழித்து அழகுபடுத்தியுள்ள நடைபாதைகளில் எந்த விதமான விதிமுறைகளுக்கும் கட்டுப்படாமல் திடீர் கடைகள் முளைத்து விடுகின்றன. இதனால் நடைபாதைகளில் மக்கள் நடந்து செல்லமுடியவில்லை.
சிறுவர்கள், வயதானவர்கள், நோயாளிகள் என பலரும் சாலையில் நடக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார்கள். இப்படி நடப்பவர்கள் வாகனங்கள் மோதி படுகாயம் அடையும் நிலை நாள் தோறும் சென்னையில் நடக்கிறது. இதையெல்லாம் கருத்தில் கொண்டு, நடைபாதை கடைகளை அவ்வப்போது மாநகராட்சி அகற்றி வருகிறது.
முக்கிய வணிகப்பகுதிகளில் நீண்டகாலமாக நடைபாதைகளில் கடைகளை வைத்துள்ளவர்களுக்கு மாற்று இடங்களை வழங்கி அந்த பகுதிகளில் உள்ள நடைபாதை கடைகளை அகற்ற மாநகராட்சி முடிவு செய்துள்ளது. அதன்படி, பாண்டிபஜாரில் நடைபாதை வியாபாரிகளுக்காக பிரமாண்டமான வணிக வளாகம் கட்டப்படுகிறது.
இதுகுறித்து மேயர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:
பாண்டிபஜாரில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் ரூ4.3 கோடி செலவில் தரை தளம் மற்றும் 3 தளங்களை கொண்ட வணிக வளாகம் 18,758 சதுர அடி பரப்பளவில் கட்டப்படுகிறது. இதில் 3 லிப்ட், 36 கழிவறைகள் அமைக்கப்படுகிறது. தரை தளத்தில் 170 கடைகள் மற்ற 3 தளங்களிலும் தலா 174 கடைகள் அமைக்கப்படுகிறது. இந்த கட்டுமான பணி இம்மாத இறுதியில் முடிய உள்ளது. நடைபாதை வியாபாரிகளுக்கான இந்த வணிக வளாகத்தை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் திறந்து வைக்கவுள்ளார். உஸ்மான் சாலை, பாண்டிபஜாரில் உள்ள நடைபாதை வியாபாரிகளுக்கு இந்த வணிக வளாகத்தில் கடைகள் ஒதுக்கப்படும்.
நீதிமன்றம் பரிந்துரைத்த நடைபாதை கடைகள் தவிர மற்ற நடைபாதை கடைகள் அனைத்தும் எந்த தயவு தாட்சண்யமும் இல்லாமல் அகற்றப்படும். இவவாறு மேயர் கூறினார்.