தினமணி 17.03.2010
ராமேசுவரத்தில் ரூ. 44 லட்சம் மதிப்பு பணிகள் தாமதம்: நகராட்சி நோட்டீஸ்
ராமேசுவரம், மார்ச் 16: ராமேசுவரம் நகராட்சியில் ரூ. 44 லட்சம் மதிப்பிலான திட்டப் பணிகள் முடிவதில் தாமதம் ஏற்பட்டதால், ஒப்பந்தகாரருக்கு நோட்டீஸ் அனுப்பியதாக நகராட்சி ஆணையர் போஸ் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். ராமேசுவரம் நகராட்சிப் பகுதியில் அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின்கீழ் ராமேசுவரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள பூங்காவை ரூ. 10 லட்சம் செலவில் மேம்படுத்தவும், எம்.கே. நகரில் ரூ. 15 லட்சம் செலவில் சமுதாயக் கூடம் அமைக்கவும், பாண்டியன் திடலில் ரூ. 10 லட்சத்திலும், மல்லிகை நகரில் ரூ. 9 லட்சத்திலும் குடிநீர்த் தொட்டி கட்ட நகராட்சி நிர்வாகம் கடந்தாண்டு துவக்கத்தில் டெண்டர் விட்டது.
இப் பணிகள் துவங்கி ஓராண்டு ஆகியும் முடிவடையாமல் உள்ளதால், நகராட்சி நிர்வாகம் சம்பந்தப்பட்ட ஒப்பந்தகாரருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
இதுகுறித்து நகராட்சி ஆணையர் போஸ் கூறியதாவது:
நகராட்சி மூலம் ரூ. 44 லட்சம் செலவில் 4 திட்டப் பணிகளுக்கான டெண்டர் விடப்பட்டு, ஓராண்டுக்கு மேலாகியும் பணிகள் முடிவடையவில்லை. அதற்காக விளக்கம் கேட்டு ஒப்பந்தகாரருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளோம். மேலும் அபராதமும் விதிக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
மேற்கண்ட பணிகள் நிலுவையில் உள்ளதால், மேலும் திட்டப் பணிக்கான நிதியை ராமேசுவரம் நகராட்சிக்கு ஒதுக்க அரசு தாமதம் செய்வதாகவும், இதனால் பிற திட்டப் பணிகள் நிறைவேற்றுவதில் சிரமம் உள்ளதாக நகராட்சி நிர்வாகம் தெரிவிக்கிறது.