தினமணி 24.04.2010
பெங்களூர் மாநகராட்சியின் 44-வது மேயர் நடராஜ், துணை மேயராக தயானந்த் போட்டியின்றி தேர்வு
பெங்களூர், ஏப்.23: பெருநகர பெங்களூர் மாநகராட்சி மன்றத்துக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்ற மேயர் தேர்தலில் பாஜகவைச் சேர்ந்த எஸ்.கே. நடராஜ் 44-வது மேயராகவும், தயானந்த் துணை மேயராகவும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
÷பெருநகர மாநகராட்சியாக பெங்களூர், 2007-ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட பிறகு, மாநகராட்சி வார்டுகளின் எண்ணிக்கை 100-ல் இருந்து 198 ஆக அதிகரிக்கப்பட்டது. மாநகராட்சியின் பதவிக்காலம் கடந்த 2006-ம் ஆண்டே முடிவடைந்து விட்டபோதிலும், நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகு கடந்த மார்ச் 28-ல் மாநகராட்சி மன்றத்துக்கு தேர்தல் நடத்தப்பட்டது.
÷இதில் ஆளும் கட்சியான பாஜக பெரும்பான்மையாக 111 வார்டுகளில் வெற்றிபெற்றது. காங்கிரஸ் 65 வார்டுகளையும், மதச்சார்பற்ற ஜனதாதளம் 15 வார்டுகளையும், சுயேச்சைகள் 7 வார்டுகளையும் கைப்பற்றின. அதிக இடங்களில் வெற்றிபெற்ற பாஜக மாநகராட்சி நிர்வாகத்தைக் கைப்பற்றியது.
÷தேர்தல் நடந்து முடிந்த பிறகு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் பதவி ஏற்கவும், மேயர், துணை மேயர் தேர்தலை நடத்தவும் மாநகராட்சி மன்றக் கூட்டம் வெள்ளிக்கிழமை கூட்டப்பட்டது.
÷மேயர் பதவிக்கு பாஜகவைச் சேர்ந்த ஜே.பி.நகர் சாரக்கி வார்டு கவுன்சிலர் எஸ்.கே. நடராஜையும் பென்னிகானஹள்ளி வார்டு பாஜக கவுன்சிலர் தயானந்த்தை துணை மேயர் வேட்பாளராகவும் பாஜக நிறுத்தியது.
÷இவர்கள் இருவரும் வெள்ளிக்கிழமை காலை 9.20 மணியளவில் மாநகராட்சி தேர்தல் அதிகாரியும், மண்டல ஆணையருமான தனஞ்செயாவிடம் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். போக்குவரத்துத் துறை அமைச்சர் அசோக், மற்றும் பாஜக தலைவர்கள் ஆகியோர் நடராஜ், தயானந்த்தின் வேட்புமனுக்களை முன்மொழிந்தனர்.
கவுன்சிலர்கள் பதவியேற்பு: அதைத் தொடர்ந்து காலை 10 மணியளவில் 44-வது மாநகராட்சி மன்றத்திற்கு புதிதாக தேர்வு செய்யப்பட்ட 198 கவுன்சிலர்கள் பதவியேற்றனர்.
அவர்களுக்கு தேர்தல் அதிகாரி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அப்போது மாநகராட்சி ஆணையர் பரத்லால் மீனா முன்னிலை வகித்தார்.
÷கெம்பேகெüடா 1-வது வார்டு பாஜக கவுன்சிலர் அஸ்வத், கெம்பேகெüடா உடையணிந்து வந்து கெம்பேகெüடா பெயரில் பதவியேற்றார். கவுன்சிலர் அவ்வை மாதா, பிதா, குரு ஆகியோரின் பெயரிலும், சையத் ஹசீனா, அல்லா பெயரிலும் பதவியேற்றனர்.
ஜெயமஹால் வார்டு காங்கிரஸ் கவுன்சிலர் குணசேகர், ஓகலிபுரம் வார்டு கவுன்சிலர் குயின் எலிசபத் உள்பட தமிழ் கவுன்சிலர்களும் பதவியேற்றனர். ÷அதைத் தொடர்ந்து பிற்பகல் 1 மணியளவில் கடைசியாக காங்கிரஸ் கவுன்சிலரும், முன்னாள் மேயருமான சந்திரசேகர் பதவியேற்றுக்கொண்டார். அதன் பிறகு மேயர், துணை மேயர் தேர்தல் நடைபெற்றது.
÷அப்போது தேர்தல் அதிகாரி தனஞ்செயா, நடராஜ், தயானந்த் ஆகியோரின் வேட்புமனுக்களை ஏற்றுக்கொண்டு வேறு யாரும் மனுத்தாக்கல் செய்யாததால் அவர்கள் போட்டியின்றி ஒருமனதாக மேயர், துணை மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவித்தார்.
÷அப்போது, பாஜக கவுன்சிலர்களும் பார்வையாளர்கள் மாடத்தில் அமர்ந்திருந்த மேயர், துணை மேயரின் குடும்பத்தினரும் ஆதரவாளர்களும் கரவோசை எழுப்பி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
÷இதையடுத்து மேயருக்கான கருப்பு அங்கியை நடராஜ் அணிந்துகொண்டு மேயராக பதவியேற்றுக் கொண்டார். தயானந்த் துணை மேயராக பதவியேற்றார். அவர்களுக்கு தேர்தல் அதிகாரி தனஞ்செயாவும், ஆணையர் பரத்லால் மீனாவும் வாழ்த்துத் தெரிவித்து நாற்காலிகளில் அமரவைத்தனர். மேயர், துணை மேயருக்கு அமைச்சர்கள் அசோக், கட்டா சுப்பிரமணிய நாயுடு, பாஜக எம்எல்ஏக்கள் விஜயகுமார், நந்தீஷ் ரெட்டி, முன்னாள் அமைச்சர் ஷோபா கரந்தலஜே உள்ளிட்டோர் வாழ்த்துத் தெரிவித்தனர்.
÷அதைத் தொடர்ந்து பாஜக, காங்கிரஸ், ம.ஜ.தளத்தைச் சேர்ந்த கவுன்சிலர்களும் மேயர், துணை மேயரை வாழ்த்திப் பேசினர்.
நகரில் ஒட்டுமொத்த வளர்ச்சிப் பணிகள் செய்ய மேயர் சீரிய முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென எதிர்க்கட்சி கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
÷எதிர்க்கட்சி கவுன்சிலர்கள் பேசும்போது சிறிது நேரம் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. அதன் பிறகு மாநகராட்சி மன்ற காங்கிரஸ் எதிர்க்கட்சி தலைவராக நாகராஜ், துணைத் தலைவராக கோவிந்தராஜ், ம.ஜ.தள எதிர்க்கட்சித் தலைவராக பத்மநாபாரெட்டி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டதை மேயர் அறிவித்தார்.
மேயர், துணை மேயர் வாழ்க்கை குறிப்பு: முதல் முறையாக பாஜகவின் மேயராக பதவியேற்றுள்ள நடராஜ், சாரக்கி வார்டைச் சேர்ந்தவர். அதே வார்டில் 3 முறை கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தீவிர ஆர்.எஸ்.எஸ். தொண்டராக இருந்து வந்த இவர், கடந்த 1992-ல் பாஜகவில் இணைந்தார்.
1996 முதல் 2001-ம் ஆண்டு வரை மாநகராட்சி மன்ற நிலைக்குழு உறுப்பினராக பதவி வகித்தவர். மாநகராட்சி மன்ற பாஜக எதிர்க்கட்சி தலைவராகவும் பதவி வகித்தவர். ÷
இளம் வயதில் துணை மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தயானந்த் (27) எம்.டெக் படித்தவர். தீவிர பாஜக தொண்டர். இந்த மேயர், துணை மேயரின் பதவிக்காலம் ஒராண்டு மட்டுமே. இவர்களின் பதவிக்காலம் முடிந்த பிறகு வேறு கவுன்சிலர்கள் மேயர், துணை மேயராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.