தினமலர் 24.08.2012
நாமக்கல் நகராட்சிக்கு 45 குப்பை தொட்டிகள்
மக்கல்: நாமக்கல் நகராட்சியில், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில், 24 லட்சம் ரூபாய் மதிப்பில், 45 குப்பைத் தொட்டிகள் வாங்கப்பட்டுள்ளது. அந்த தொட்டிகள், நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து வார்டுகளில் வைக்கப்பட்டுள்ளது.நாமக்கல் நகராட்சி, குப்பையில்லா நகராட்சியாக மாற்ற, பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக, வீடுகளில் சேகரமாகும் குப்பைகள், நேரடியாக பெறப்பட்டு அவை மக்கும் குப்பை, மக்கா குப்பைகள் என தனியாக பிரித்து, பின், அவை லாரிகள் வெளியிடத்துக்கு கொண்டு சென்று அப்புறப்படுத்தப்படுகிறது.
திறந்த வெளி லாரி மூலம் குப்பைகள் கொண்டு செல்லும்போது, காற்றில் பறந்து மாசு ஏற்படுத்துகிறது. அதை தவிர்க்கும் வகையில், பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ், ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.அந்த திட்டத்தில், 24 லட்சம் ரூபாய் மதிப்பில், 45 குப்பைத் தொட்டிகள் வாங்கப்பட்டுள்ளது. அந்த குப்பைத் தொட்டிகள், நகராட்சிக்கு உட்பட்ட, 39 வார்டுகளில் வைக்கப்பட உள்ளது. அவற்றை எடுத்துச் செல்வதற்காக பிரத்யோகமாக இரு லாரிகள் வாங்கப்பட்டுள்ளது.
இந்த லாரிகள் மூலம் குப்பைத் தொட்டிகள் எடுத்துச் செல்லும்போது, குப்பைகள் காற்றில் பறந்து விழாது. பாதுகாப்பான முறையில் குப்பை அகற்ற முடியும். ஒரு வாரத்தில், அவை பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட உள்ளது என, நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.இதுகுறித்து, நகராட்சி சேர்மன் கரிகாலன் கூறுகையில், “”நகராட்சியுடன் இணைக்கப்பட்ட வார்டு உட்பட அனைத்து வார்டுகளிலும், புதிதாக வாங்கப்பட்ட குப்பைத் தொட்டிகள் வைக்கபட உள்ளது. அவற்றில் கொட்டப்படும் குப்பைகள் பாதுகாப்பான முறையில் லாரிகள் மூலம் அகற்றப்படும். மேலும், காப்பேக்டர் எனும் லாரியும் வாங்கப்பட உள்ளது. திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் இவை பெறப்பட்டுள்ளது,” என்றார்.