தினமணி 24.11.2009
பெங்களூர் நகரில் 45 இடங்களில் அனைத்து வசதிகளுடன் கூடிய பஸ் நிலையங்கள்
பெங்களூர், நவ. 23: பெங்களூர் நகரில் பயணிகள் போக்குவரத்து வசதிக்காக 45 பகுதிகளில் அனைத்து வசதிகளுடன் கூடிய பஸ் நிலையங்களை அமைக்கிறது நகர போக்குவரத்துக் கழகம்.
பெங்களூர் நகரின் முக்கிய பகுதிகளில் தற்போது உள்ள பஸ் நிலையங்களில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாமலும், குறிப்பிட்ட பஸ் நிலையத்திலிருந்து எல்லா பகுதிகளுக்கும் செல்ல பஸ் வசதி இல்லாமலும் உள்ளது. இதைப் போக்க நகரில் 45 பகுதிகளில் அடிப்படை வசதியுடன் கூடிய நவீன பஸ் நிலையத்தை நகர போக்குவரத்துக்கழகம் அமைக்கிறது. “டிராபிக் அன்ட் டிரான்ஸிட் மானேஜ்மெண்ட் சென்டர்‘ (டிடிஎம்சி) என்ற பெயரில் ஜவாஹர்லால் நேரு நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தின் கீழ் இந்த மையங்கள் கட்டப்படுகிறது.
இதுகுறித்து நகர போக்குவரத்துத் துறை உயர் அதிகாரி ஒருவர் நமது நிருபரிடம் கூறியதாவது:
டிராபிக் டிரான்ஸிட் மானேஜ்மெண்ட் சென்டரில் பஸ் பயணிகள் அவர்கள் வந்த வாகனங்களை நிறுத்த போதுமான இடம், ஏடிஎம் மையங்கள், அவசர மருத்துவ உதவிக்கு கிளினிக், வணிக வளாகம், தொலைபேசி வசதி ஆகியவை அடங்கியிருக்கும்.
மேலும் குறிப்பிட்ட இந்த போக்குவரத்து மையத்தில் இருந்து நகரின் எல்லாப் பகுதிக்கும் செல்ல வசதியாக பஸ்கள் இருக்கும். இந்த வகையில் 45 போக்குவரத்து மையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதில் முதல்கட்டமாக 10 மையங்கள் கட்டும் பணி துவங்கி நடந்து வருகிறது. இவை ஜெயநகர், விஜயநகர், பனசங்கரி, கோரமங்களா, சாந்திநகர், ஒயிட்பீல்டு (ஐடிபிஎல்), கெங்கேரி, யஷ்வந்தபுரம், தொம்மலூர், மற்றும் பன்னர்கட்டா ஆகிய 10 இடங்களில் கட்டப்பட்டு வருகிறது. இதன் கட்டுமானப்பணி 2010-ம் ஆண்டு ஜூலை மாதம் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த 10 மையங்கள் கட்ட ரூ. 440 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் 35 சதவிகித நிதியை மத்திய அரசும், 15 சதவிகித நிதியை கர்நாடக அரசும் ஏற்கும். மீதி 50 சதவிகிதத்தை பெங்களூர் நகர போக்குவரத்துக்கழகம் ஏற்றுக்கொள்ளும்.
இரண்டாவது கட்டமாக 11 பகுதிகளில் டிராபிக் டிரான்ஸிட் மானேஜ்மெண்ட் மையம் கட்டப்படும். இவற்றை தனியாருடன் இணைந்து அரசுத் துறை கட்டும்.
இந்த பஸ் நிலையங்கள் கட்டி முடிக்கப்படும்போது நகரின் மத்திய பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு கிடைக்கும் அனைத்து வசதிகளும் இந்தப் பேருந்து நிலையங்களிலும் கிடைக்கும் என்றார் அந்த அதிகாரி.